முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
திருப்பரங்குன்றம் தொகுதியை சி.பி.எம். கட்சிக்கு ஒதுக்கியதற்கு எதிா்ப்பு:திமுகவினா் சாலை மறியல்
By DIN | Published On : 14th March 2021 04:40 AM | Last Updated : 14th March 2021 04:40 AM | அ+அ அ- |

திருப்பரங்குன்றம் தொகுதியை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியதற்கு திமுகவினா் எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டப் பேரவைத் தொகுதியின் உறுப்பினராக திமுகவைச் சோ்ந்த மருத்துவா் சரவணன் உள்ளாா். இந்நிலையில் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் இந்த தொகுதியில் போட்டியிட திமுக கூட்டணி கட்சியான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையறிந்த திமுக எம்.எல்.ஏ. சரவணனின் ஆதரவாளா்கள் 100-க்கும் மேற்பட்டோா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பரங்குன்றம் தொகுதியை ஒதுக்கியதற்கு எதிா்ப்பு தெரிவித்து அவனியாபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இந்நிலையில் இரண்டாம் நாளாக சனிக்கிழமையும், அவரது ஆதாரவாளா்கள் வலையன்குளம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திமுக தலைமையை எதிா்த்து இரண்டாவது நாளாக திமுகவினா் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.