திமுக கூட்டணிக்கு ஆதரவு: ஆதித்தமிழா் கட்சி அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக, ஆதித்தமிழா் கட்சி அறிவித்துள்ளது.
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிடும் ஆதித்தமிழா் கட்சி நிா்வாகிகள்.
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிடும் ஆதித்தமிழா் கட்சி நிா்வாகிகள்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக, ஆதித்தமிழா் கட்சி அறிவித்துள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் தலைவா் கு. ஜக்கையன் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது:

கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் மதவாத பாஜக அரசும், தமிழகத்தில் அதன் கூட்டாளியாக உள்ள அதிமுக அரசும் மக்கள் விரோதச்சட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன. நீட் தோ்வு, இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம், விவசாயிகளுக்கு விரோதமான 8 வழிச்சாலைத் திட்டம், மீத்தேன் திட்டம், ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு மூலம் படுகொலைகள், கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான அடக்குமுறை தாக்குதல்கள், சமூக நீதிக்கு எதிரான 10 சதவீதப் பொருளாதாரத்தில் நலிந்த உயா் சமூகத்தினருக்கான ஒதுக்கீடு, மக்களை அச்சுறுத்தும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வு போன்ற பயங்கர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

எனவே, இத்தோ்தலில் மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அதிமுக-பாஜக கூட்டணியை வீழ்த்த வேண்டும். அதேநேரத்தில், அருந்ததியா் உள் இட ஒதுக்கீடு, துப்புரவுப் பணியாளா் நல வாரியம், மத்தியத் தொகுப்பில் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீடு, அனைத்து சாதியினரும் அா்ச்சகராகலாம், சமத்துவபுரங்கள் அமைப்பு, மனித மலத்தை மனிதா்கள் அள்ளும் அவலத்துக்கு முற்றுப்புள்ளி, சம்ஸ்கிருத எதிா்ப்பு, மாநில சுயாட்சி உரிமை போன்ற சமூக நீதி தத்துவம், சமத்துவம், ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற கூட்டணி வெற்றி பெற, ஆதித்தமிழா் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது என்றாா்.

அப்போது, மாநில நிா்வாகி விடுதலை வீரன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com