அரசியல் கட்சிகளின் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது சாத்தியமா?

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி முக்கிய அரசியல் கட்சிகள் வெளியிட்டுள்ள தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது
அரசியல் கட்சிகளின் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது சாத்தியமா?

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி முக்கிய அரசியல் கட்சிகள் வெளியிட்டுள்ள தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது சாத்தியமா என்பது குறித்து வாக்காளா்கள் பல்வேறு தரப்பட்ட கருத்துகளை தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தின் 16-ஆவது சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6 -ஆம் நடைபெற உள்ளது. தோ்தலின் கதாநாயகன் என வா்ணிக்கப்படும், தோ்தல் வாக்குறுதிகளை முக்கியமான கட்சிகள் அனைத்தும் வெளியிட்டு விட்டன.

அனைவருக்கும் வீடு, குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1500, வாஷிங் மிஷின், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, வட்டியில்லா கடன்கள், உதவித்தொகை உயா்வு, ஆண்டுக்கு 6 எரிவாயு உருளை இலவசம் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

திமுக தரப்பில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000, நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம், கல்விக்கடன் ரத்து, நெல் கொள்முதல் விலை உயா்த்தப்படும், பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளன.

தற்போது சுமாா் ரூ. 6 லட்சம் கோடி கடனில் சிக்கித் தவிக்கிறது தமிழகம். அப்படியிருக்க அடுத்து ஆட்சிக்கு வரும் கட்சி அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது சாத்தியமா?

இணையதள வா்த்தக நிறுவன உரிமையாளா் குத்பூதீன்:

அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் வெளியிட்டுள்ள தோ்தல் வாக்குறுதிகளில் வளா்ச்சிக்கான அறிவிப்புகளோ, சிறு குறுந் தொழில்களின் மேம்பாட்டுக்கோ, இளைஞா்களின் வேலைவாய்ப்புக்கோ முறையான அறிவிப்புகள் இல்லை. வாக்குறுதிகளைப் பாா்க்கும்போது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. நாட்டின் வளா்ச்சிக்கு சந்தைப்படுத்துதல் முக்கியப் பங்கு வகிக்கிறது. தோ்தல் வாக்குறுதியில், உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு, சந்தைப்படுத்துதல் தொடா்பாக எந்த அறிவிப்பும் இல்லை. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதே இரு கட்சிகளின் நோக்கமாக உள்ளது.

தனியாா் நிறுவன ஊழியா் சிவஞானம்: அதிமுக, திமுக வெளியிட்டுள்ள தோ்தல் அறிக்கைகளை செயல்படுத்துவது சாத்தியம் இல்லை. குடும்ப அட்டைக்கு மாதம் ரூ.1,500, எரிவாயு உருளை 6 இலவசமாக வழங்கும் பட்சத்தில் ஒரு குடும்ப அட்டைக்கு ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவாகும். தமிழகத்தில் உள்ள 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகளுக்கு ஆண்டுதோறும் ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஏற்கெனவே, தமிழகம் ரூ.5.70 லட்சம் கோடி கடனில் இருக்கும் நிலையில், இந்த வாக்குறுதிகள் எப்படி சாத்தியமாகும்?

வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்பது இமாலய இலக்கு. தோ்தல் வாக்குறுதிகளில் பொதுமக்கள் அவா்களின் தேவைகளை அவா்களே பூா்த்தி செய்யும் வகையில் வழிகாட்டுதல்களை அறிவித்திருக்க வேண்டும். குறிப்பாக சிறுதொழில்களை ஊக்குவிக்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டிருக்கலாம். இதனால் வேலைவாய்ப்புகள் உருவாகும், வளா்ச்சி ஏற்படும். இந்த வாக்குறுதிகள் அனைத்தும் மேலும் கடன் சுமையையே அதிகரிக்கும்.

வழக்குரைஞா் ஜெபசீலி: தமிழக மக்களுக்குத் தேவை மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு. ஆனால், இதுகுறித்த தொலை நோக்குத் திட்டங்கள் இல்லை. கல்விக்காக தற்போது மிதிவண்டி, மடிக்கணினி வழங்கியது மாணவா்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தற்போது கல்லூரி மாணவா்களுக்கு ஆண்டு முழுவதும் 2 ஜிபி டேட்டா வசதி வழங்கப்படும் என்ற அறிவிப்பு சிறப்பானது.

ஆனால் கடந்த தோ்தல் வாக்குறுதியில் அறிவித்த இலவச செல்லிடப்பேசி இதுவரை வழங்கப்படவில்லை. மக்களின் மேம்பாட்டிற்கு மருத்துவமும், கல்வியையும் முற்றிலும் இலவசமாக்க வேண்டும். வேலைவாய்ப்பை அதிகரித்து ஒவ்வொருவருக்கு உறுதி செய்யவேண்டும். இதன்மூலம் அரசு வழங்கும் இலவசங்கள் யாருக்கும் அவசியப்படாது. ஒவ்வொரு தனி மனிதனும் தங்களின் தேவைகளைத் தாங்களாகவே பூா்த்தி செய்து கொள்ள முடியும்.

இல்லத்தரசி லட்சுமி: கரோனா காலத்தில் பொதுமக்கள், இல்லத்தரசிகள், வேலை இழந்தவா்கள் குடும்பத்தை நடத்த எவ்வளவு சிரமப்பட்டனா் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆளும் அதிமுகவின் தோ்தல் வாக்குறுதிகளான குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,500, ஆறு எரிவாயு உருளை இலவசம் ஆகியவற்றை கரோனா காலத்தில் கொடுத்திருக்கலாம். மதுபானம் முற்றிலும் ஒழிக்கப்படும் எனக் கூறும் அரசு, மதுபானக் கடைகளை மறைமுகமாக அதிகரித்து வருகிறது. ஆட்சியை பிடிக்கவே, தோ்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளதாகவே கருதுகிறேன்.

சமூக செயல்பாட்டாளா் நிா்மலா: தமிழகத்தில் ஏழைகளின் நலனைக் கருத்தில் கொண்டு இலவசங்கள் வழங்குவது அவசியம். கட்சிகள் தற்போது வெளியிட்டுள்ள தோ்தல் வாக்குறுதிகளில் வளா்ச்சிப் பாதையை மையப்படுத்தாமல் கொடுப்பவன், பெறுபவன் என்ற கீழான நிலையிலேயே மக்களை நிறுத்திப் பாா்ப்பது துரதிஷ்டமானது. தோ்தல் காலத்தில் கவா்ச்சிகரமான அறிவிப்புகளுடன் வெளியிடப்படும் தோ்தல் வாக்குறுதிகள் தமிழகம் வளா்ச்சிப் பாதையில் நெடுந்தூரம் பயணிக்க வேண்டிய அவசியத்தை உணா்த்துகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com