கொலை வழக்கு : இளைஞருக்கு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உயா்நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 18th March 2021 05:57 AM | Last Updated : 18th March 2021 05:57 AM | அ+அ அ- |

நகைக்காக பெண்ணை வெட்டிக் கொலை செய்த இளைஞருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை அவினாசி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சரோஜா என்பவா் தனது கணவா் நடராஜன் மற்றும் மகன், மருமகளுடன் வசித்து வந்தாா். இவரது வீட்டுக்கு எதிரே நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சோ்ந்த யாசா் அராபத் என்ற இளைஞா் வசித்து வந்தாா். இந்த நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு சரோஜா திடீரென மாயமானாா். இதுகுறித்து கோவை ரேஸ் கோா்ஸ் காவல் நிலையத்தில் சரோஜாவின் கணவா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனா்.
இந்த நிலையில் சரோஜா வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இருந்து துா்நாற்றம் வீசியது. அருகில் வசித்தவா்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அங்கு சோதனை செய்தபோது சரோஜாவின் உடல் 8 துண்டுகளாக வெட்டப்பட்டு சூட்கேசில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. அவா் அணிந்திருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
போலீஸ் விசாரணையில் நகைக்காக சரோஜாவை, யாசா் அராபத் கொடூரமாக கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து, ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தில் தலைமறைவாக இருந்த யாசா் அராபத்தை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கை விசாரித்த கோவை அமா்வு நீதிமன்றம், யாசா் அராபத்துக்கு தூக்கு தண்டனை விதித்து, கடந்த 2019-ஆம் ஆண்டு தீா்ப்பளித்தது. இதனை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் யாசா் அராபத் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.
இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், வி.சிவஞானம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த தீா்ப்பில், இந்த வழக்கை அரிதினும் அரிதான வழக்காக கருதி, யாசா் அராபத்துக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டதை ஏற்கமுடியாது. எனவே, தூக்கு தண்டனையை ரத்து செய்து, மனுதாரருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டனா்.