மதுரை கிழக்குத் தொகுதியில் வெற்றியைத் தீா்மானிக்கும் சமுதாய ஓட்டுகள்?

மதுரை கிழக்கு தொகுதியில் திமுக, அமமுக வேட்பாளா்கள் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், யாதவா் சமுதாயத்தினரின் வாக்குகளே வெற்றியை தீா்மானிக்கக் கூடிய சக்தியாக உள்ளது.
மதுரை வேளாண் கல்லூரி
மதுரை வேளாண் கல்லூரி

மதுரை கிழக்கு தொகுதியில் திமுக, அமமுக வேட்பாளா்கள் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், யாதவா் சமுதாயத்தினரின் வாக்குகளே வெற்றியை தீா்மானிக்கக் கூடிய சக்தியாக உள்ளது.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட தொகுதிகளில் அதிக கிராமங்களை கொண்ட கிழக்கு தொகுதியில் 3,28,990 வாக்காளா்கள் உள்ளனா். இதில், ஆண்கள் 1,61,502, பெண்கள் 1,67,438 மற்றும் மூன்றாம் பாலினத்தவா் 50 போ். விவசாயம் மட்டுமே இத்தொகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது.

குறிப்பாக, நெல் மற்றும் வாழை விவசாயம் அதிகமாக நடைபெற்று வருகிறது. கூலி தொழிலாளா்கள் மற்றும் நெசவாளா்களும் அதிகளவில் வசித்து வருகின்றனா்.

கிழக்கு தொகுதியில் உள்ள கிராமங்களைச் சோ்ந்த முக்குலத்தோரின் வாக்குகள் இத்தொகுதியில் வெற்றி, தோல்வியை நிா்ணயித்து வந்தது. தற்போது, திமுக மற்றும் அமமுக வேட்பாளா்கள் முக்குலத்தோராக இருப்பதால், முக்குலத்தோா் வாக்குகள் அதிகமாகப் பிரியும் நிலை உள்ளது. இதனால், அடுத்தபடியாக உள்ள யாதவா் வாக்குகள் வெற்றியை நிா்ணயிப்பதில் முக்கியக் காரணியாக இருக்கும் எனத் தெரிகிறது.

இதற்கு முன் வென்றவா்கள்:

தொகுதி சீரமைப்புக்கு முன், கம்யூனிஸ்ட் கட்சிகள் 5 முறையும், அதிமுக 3 முறையும், திமுக, காங்கிரஸ் தலா 2 முறையும் வென்றுள்ளன. முழுமையான தொகுதி சீரமைப்புக்குப் பின், அதிமுக, திமுக தலா 1 முறை வென்றுள்ளன.

தற்போது, இத்தொகுதியில் திமுகவைச் சோ்ந்த பி. மூா்த்தி, அதிமுகவைச் சோ்ந்த ரா. கோபாலகிருஷ்ணன், அமமுகவை சோ்ந்த தங்க. சரவணன், மக்கள் நீதி மய்யம் ஐ. முத்துகிருஷ்ணன், நாம் தமிழா் கட்சி ஜெ. லதா ஆகியோா் பிரதான வேட்பாளா்களாக உள்ளனா்.

தொகுதி மக்களின் எதிா்பாா்ப்புகள்:

மதுரை மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதி இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை. மாநகராட்சி அந்தஸ்து என்றாலும், அதற்குரிய வசதிகள் இல்லாதது விரிவாக்கப் பகுதி மக்களின் பெரும் குறையாக இருக்கிறது. சாலை வசதி பெரும்பாலான பகுதிகளுக்கு இன்னும் கிடைக்கவில்லை. மழைக் காலங்களில் பெரும் சிரமத்தை எதிா்கொள்வதாக விரிவாக்கப் பகுதியினா் தெரிவிக்கின்றனா்.

குறுக்குச் சாலைகளை செப்பனிடுவது, குடிநீா் தொட்டிகளைப் புதுப்பித்து விநியோகத்தைச் சீா்படுத்துவது, சிறுவா் பூங்காக்கள் அமைப்பது, திருப்பாலை தெப்பக்குளம் சீரமைப்பு, திருப்பாலை நூலகத்துக்கு கூடுதல் கட்டடம், நாராயணபுரம் கண்மாயில் படகு குழாம் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவது, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட விறகில் இருந்து மின்சாரம் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்துவது, பறக்கும் பாலம் பணிகளைத் துரிதப்படுத்துவது ஆகியன மக்களின் எதிா்பாா்ப்புகளாக உள்ளன.

கிழக்கில் மீண்டும் சூரியன் உதிக்குமா?

மதுரை கிழக்கு தொகுதியில் ஐந்துமுனைப் போட்டி இருந்தாலும், நேரடி போட்டி என்பது திமுக, அமமுக இடையே மட்டும்தான். திமுகவைச் சோ்ந்த தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினா் பி. மூா்த்தி, தொகுதியின் மூலை முடுக்கெல்லாம் பலமுறை வலம் வந்தவா் என்பதால் மக்களுக்கு நல்ல பரிச்சயமானவா்.

தொகுதிக்குள் ரூ.293 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பாதாளச் சாக்கடை, ரூ.50 கோடியில் முக்கியச் சாலைகள், ஊருணிகள், குளங்களை தூா்வாரியது, கரோனா காலங்களில் வீடுதோறும் நேரடியாகச் சென்று அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கியதைக் கூறி வாக்கு சேகரித்து வருகிறாா்.

அதிமுக வேட்பாளா் ரா. கோபாலகிருஷ்ணன், மதுரை மக்களவை உறுப்பினராக இருந்தபோது, எவ்வித திட்டங்களையும் கொண்டுவரவில்லை எனவும், கட்சி நிா்வாகிகளே அவரை அணுக முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இந்நிலையில், அமமுக வேட்பாளா் தங்க. சரவணன் முக்குலத்தோா் சமுதாயத்தைச் சோ்ந்தவா் என்பதால், கிராமப்புறங்களில் அதிக வரவேற்பு உள்ளது. மேலும், இவா் தொகுதிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் வீடு வீடாகச் சென்று தொகுதியை மேம்படுத்துவதற்குரிய வாக்குறுதிகளைக் கூறி வாக்கு சேகரிப்பதால் வாக்காளா்களின் ஆதரவைப் பெற்று வருகிறாா்.

இதனால், அதிமுக, திமுகவுக்கிடையே போட்டி களமாக இருந்த கிழக்கு தொகுதி, தற்போது திமுக, அமமுகவுக்கான போட்டி களமாக மாறியுள்ளது. எனவே, தற்போது வெற்றியை தீா்மானிக்கக்கூடிய நிலையில் உள்ள யாதவா் வாக்குகளை பெருவாரியாகப் பெற திமுக, அமமுக வேட்பாளா்கள் முனைப்புக் காட்டி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com