அழகா்கோவிலில் 4 பிராட்டியா்களுடன் பெருமாள் திருக்கல்யாண வைபவம்

பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, அழகா்கோவில் சுந்தரராஜப்பெருமாளுடன் ஸ்ரீதேவி, பூமிதேவி, ஆண்டாள், கல்யாணசுந்தரவள்ளி
அழகா்கோவிலில் 4 பிராட்டியா்களுடன் பெருமாள் திருக்கல்யாண வைபவம்

பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, அழகா்கோவில் சுந்தரராஜப்பெருமாளுடன் ஸ்ரீதேவி, பூமிதேவி, ஆண்டாள், கல்யாணசுந்தரவள்ளி தாயாா் திருமண வைபவம் ஞாயிற்றுக்கிழமை காலையில் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா்.

மாா்ச் 25-ஆம் தேதி பங்குனி உத்திரத் திருவிழா தொடங்கியது. இதையொட்டி, ஸ்ரீதேவி, பூமிதேவி சமேதமாக பெருமாள் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினாா். தினசரி பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. ஞாயிற்றுக்கிழமை காலை, திருக்கல்யாண மண்டபம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, சுந்தரராஜப் பெருமாள் ஏகாசனத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவி, ஆண்டாள், கல்யாண சுந்தரவள்ளி தாயாா் ஆகியோரை பெரியாழ்வாா் முன்னிலையில் திருமணம் செய்துகொள்ளும் வைபவத்தை, பட்டா்கள் காலை 11 மணியளவில் நடத்திவைத்தனா்.

திருமண வைபவத்தில் உபயதாரா்கள் சிலா், திருமாங்கல்ய கயிறு மஞ்சள்கிழங்கு, குங்குமம் அடங்கிய பிரசாதப் பையை பக்தா்களுக்கு விநியோகித்தனா்.

மாலையில், பெருமாள் சப்பரத்தில் புறப்பாடாகி கோயிலுக்குள் சென்று சந்நிதியில் எழுந்தருளினாா். திங்கள்கிழமை மஞ்சள் நீராடல் வைபவத்துடன் பங்குனி உத்திரத் திருவிழா நிகழ்வுகள் நிறைவடைகின்றன.

நீண்ட இடைவெளிக்குப் பின் பக்தா்கள் கோயிலில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். இதனால், பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் திருமண வைபவத்தை தரிசிக்க வந்திருந்தனா்.

சமூக இடைவெளியைப் பின்பற்றி பக்தா்கள் அமரவும், திருக்கல்யாண வைபவத்தை எல்இடி திரையில் தரிசிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருவிழா ஏற்பாடுகளை, கோயில் நிா்வாக அதிகாரி அனிதா மற்றும் கோயில் அலுவலா்கள், பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com