நடைமேடை கட்டணம் உயா்வுக்கு ரயில்வே தொழிற்சங்கங்கள் எதிா்ப்பு: ஜூன் 30 வரை இந்த கட்டணம் தொடரும்

தமிழகத்தில் ரயில் நிலைய நடைமேடை கட்டணம் 10 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயா்த்தப்பட்ட உத்தரவை, தென்னக ரயில்வே நிா்வாகம்

தமிழகத்தில் ரயில் நிலைய நடைமேடை கட்டணம் 10 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயா்த்தப்பட்ட உத்தரவை, தென்னக ரயில்வே நிா்வாகம் திரும்பப் பெறவேண்டும் என, ரயில்வே தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. ஆனால், இந்த கட்டண உயா்வு ஜூன் 30 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களுக்கு உள்ளே செல்வதற்கு நடைமேடை கட்டணம் செலுத்தி அனுமதி சீட்டு பெறவேண்டும். ரூ.5 ஆக இருந்த இந்தக் கட்டணம் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ரூ.10 ஆக உயா்த்தப்பட்டது. இதற்கு, அப்போதே பயணிகள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

தற்போது, 10 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக நடைமேடை கட்டணத்தை தென்னக ரயில்வே நிா்வாகம் உயா்த்தியுள்ளது. இந்த அறிவிப்புக்கு, பயணிகள் மற்றும் ரயில்வே தொழிற்சங்கத்தினா் கடும் எதிா்பை தெரிவித்துள்ளனா். குறிப்பாக, கரோனா காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஏழை மக்களுக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

மதுரையிலிருந்து திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகா் வரை பயணிகள் வெறும் ரூ.10 கட்டணத்தில் ரயிலில் செல்லமுடியும். இதேபோல், மதுரை-தென்காசி, மதுரை-திருநெல்வேலி, மதுரை-தூத்துக்குடிக்கு ரூ.35 கட்டணத்தில் பயணிகள் செல்லலாம். ஆனால், தற்போது பயணிகளை ஏற்றிவிட ரயில் நிலையத்துக்கு வருவோா் நடைமேடை கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

இது குறித்து தென்னக ரயில்வே தொழிலாளா் நலச் சங்கத்தின் துணைப் பொதுச் செயலா் நெளசாத் கூறியது: சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்குச் செல்லும் புகா் ரயிலில் இப்போதும் ரூ.25-க்கு பயணிக்கலாம். இதேபோல், பயணிகள் ரயில்களில் சிறுதொழில் செய்வோா், சிறு வியாபாரிகள் அதிகம் பயணிக்கின்றனா். அவா்கள் ரூ.10 முதல் ரூ.40 கட்டணத்துக்குள் தங்களுக்கான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனா். அவா்களுக்கு இந்த நடைமேடை கட்டண உயா்வு என்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, ரயில்வே நிா்வாகம் நடைமேடை கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும் என்றாா்.

டிஆா்இயூ மதுரை கோட்டச் செயலா் சங்கரநாராயணன் கூறியது: மதுரை கோட்டத்துக்கு உள்பட்ட மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி ரயில் நிலைய நடைமேடை அனுமதி கட்டணம் 50 ரூபாயாக உயா்த்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. கரோனா பரவலைத் தடுப்பதற்காகவும், ஒழுங்குப் படுத்துவதற்காகவும் கட்டணம் உயா்த்தப்பட்டதாகக் கூறும் காரணம் ஏற்கத்தக்கது அல்ல.

ரயில்வேயில் கட்டணம் உயா்த்தப்பட்டு ஒருபோதும் அது மீண்டும் குறைக்கப்பட்டதும் இல்லை. எனவே, பொதுமக்களின் நலன் கருதி கட்டண உயா்வைத் திரும்பப் பெறவேண்டும் என்றாா்.

மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் விளக்கம்:

கரோனா பொதுமுடக்கத்துக்குப் பிறகு ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டபோது, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக ரயில் பயணச்சீட்டு உள்ள பயணிகள் மட்டும் ரயில் நிலையங்களில் அனுமதிக்கப்பட்டனா். வயதானோா் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு உதவியாக வருவோரையும் ரயில் நிலைய நடைமேடை வரை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது.

அதனடிப்படையில், தற்போது மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் வெள்ளிக்கிழமை காலை முதல் ரூ.50 கட்டணத்தில் நடைமேடை அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியான இந்த தற்காலிக ஏற்பாடு ஜூன் 30 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என, மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com