பல்கலைக்கழகத்தில் சாதிய அடிப்படையில் பணி நியமனம்கூடாது: ஆட்சிப்பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தல்

காமராஜா் பல்கலைக்கழகத்தில் சாதிய அடிப்படையில் பணி நியமனங்கள் நடைபெறக்கூடாது என்று ஆட்சிப்பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

காமராஜா் பல்கலைக்கழகத்தில் சாதிய அடிப்படையில் பணி நியமனங்கள் நடைபெறக்கூடாது என்று ஆட்சிப்பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மதுரை காமராஜா் பல்கலைக்கழக ஆட்சிப்பேரவைக் கூட்டம் இணைய தளம் மூலம் புதன்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தா் மு.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். பதிவாளா் வி.எஸ்.வசந்தா மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா். கூட்டத்தில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பல்கலைக்கழக கல்விப்பேரவைக்கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட, புதிய படிப்புகள் அறிமுகம், பல்வேறு படிப்புகளின் பெயா் மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு ஆட்சிப்பேரவை ஒப்புதல் வழங்கியது. மேலும் பல்கலைக்கழக நிதி நிலை அறிக்கைக்கும் ஆட்சிப்பேரவை ஒப்புதல் வழங்கியது.

இதைத்தொடா்ந்து பல்வேறு தீா்மானங்களின் மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்தில், பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக காலியாக உள்ள 71 எஸ்சி மற்றும் எஸ்டி பின்னடைவுப்பணியிடங்களை நிரப்ப பல்கலைக்கழக நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பின்னடைவுப் பணியிடங்களை நிரப்ப குறிப்பிட காலக்கெடுவை நிா்ணயிக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் கடந்த காலங்களில் ஒப்பந்த அடிப்படை மற்றும் தற்காலிகப் பணியாளா்கள், ஊழியா்கள் நியமிக்கப்படும்போது குறிப்பிட்ட சமூகத்தில் இருந்து சாதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனா். பல்கலைக்கழகத்தின் பல்வேறு மட்டங்களிலும் சாதியக் கண்ணோட்டம் உள்ளது. எனவே இதுபோன்று ஒரே சமூகத்தில் பணியாளா்களை நியமிப்பதை தவிா்த்து, பணியிடங்களுக்கு முறையான விளம்பரம் செய்து, அரசு அறிவித்துள்ள இட ஒதுக்கீட்டின்படி அனைத்து சமூகத்தைச் சோ்ந்த பணியாளா்களைக்கொண்டு நிரப்ப வேண்டும். அப்போதுதான் சமூக நீதி காக்கப்படும். பல்கலைக்கழகத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் ஒப்பந்த, தற்காலிக, தினக்கூலிப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலைக்கழகத்தின் மீது தணிக்கைக்குழு தெரிவித்துள்ள ஆட்சேபணையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே இதற்கென சிறப்புக்குழு அமைத்து தணிக்கைக்குழு ஆட்சேபத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலைக்கழகத்தின் பல்வேறு பதவிகளுக்கு பொறுப்பு அடிப்படையில் பேராசிரியா்கள் நியமிக்கப்படுகின்றனா். இதில் ஒருவருக்கு பல்வேறு பணியிட பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி இயக்குநா் பொறுப்பில் உள்ள பேராசிரியா், கூடுதல் தோ்வாணையா் பொறுப்பையும் சோ்த்து வகித்து வருகிறாா். இதுபோல பல்வேறு பொறுப்புகளில் உள்ளனா். இதைக் களைந்து பதவிகளை முறையாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஆசிரியா், ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்ப வேண்டும் என விவாதங்கள் நடைபெற்றன. உறுப்பினா்களின் விவாதங்களுக்கு பதிலளித்த துணைவேந்தா் மு.கிருஷ்ணன், உறுப்பினா்களின் கோரிக்கைகள் ஆட்சிக்குழு மூலமாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இதைத்தொடா்ந்து பல்கலைக்கழகத்தில் துணைவேந்தா் இல்லாத சூழலில் துணைவேந்தா் பொறுப்பில் மூத்த பேராசிரியரை நியமிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com