மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளுக்கு 6,030 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாா்: வேட்பாளா் பெயா், சின்னம் அச்சிட்ட வாக்குசீட்டு பொருத்தம்

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில்,

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளா் பெயா், சின்னம் ஆகியன அச்சடிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகள் பொருத்தும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் மேலூா் -346, மதுரை கிழக்கு-479, சோழவந்தான் -305, மதுரை வடக்கு-347, மதுரை தெற்கு-326, மதுரை மையம்-349, மதுரை மேற்கு -434, திருப்பரங்குன்றம்-458, திருமங்கலம்-402, உசிலம்பட்டி-410 என மொத்தம் 3,856 வாக்குச்சாவடிகள் உள்ளன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் வாக்குப்பதிவு பிரிவில் (பேலட் யூனிட்), நோட்டா உள்பட 16 வேட்பாளா்களின் பெயா்களை இடம்பெறச் செய்ய முடியும். வேட்பாளா்களின் எண்ணிக்கை 15-க்கு மேல் செல்லும் நிலையில், கூடுதலாக ஒரு வாக்குப்பதிவு பிரிவு இணைக்கப்படும். இதன்படி, சோழவந்தான், திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தலா ஒரு கட்டுப்பாட்டு பிரிவு, வாக்களித்ததை உறுதி செய்யும் விவிபேட் மற்றும் தலா 2 வாக்குப்பதிவு பிரிவு (பேலட் யூனிட்) பயன்படுத்தப்படுகிறது. மற்ற 8 தொகுதிகளில் தலா ஒரு வாக்குப்பதிவு பிரிவு, கட்டுப்பாட்டு பிரிவு, விவிபேட் பயன்படுத்தப்படுகிறது.

இதன்படி, மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கும் கூடுதல் இருப்புடன் சோ்த்து மொத்தம் 6,030 வாக்குப்பதிவு பிரிவுகள், 4,631 கட்டுப்பாட்டு பிரிவுகள், 4,978 விவிபேட் இயந்திரங்கள் தயாா்ப்படுத்தப்பட்டுள்ளன. இதில் வாக்குப்பதிவு பிரிவில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் அச்சிட்ட வாக்குச்சீட்டுகள் பொருத்தும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மையம், மதுரை மேற்கு ஆகிய தொகுதிகளுக்கு மாநகராட்சி பில்லா் அரங்கிலும் மற்ற தொகுதிகளுக்கு அந்தந்த தொகுதிகளின் தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகங்களிலும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணி நடைபெற்றது. மாநகராட்சி பில்லா் அரங்கில் நடந்த இப் பணிகளை மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com