நாளை வாக்கு எண்ணிக்கை: மதுரை மாவட்டத்தில் 4 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் தயாா்

மதுரை மாவட்டத்தில் 4 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அனைத்து முன்னேற்பாடுகளுடன் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வெள்ளிக்கிழமை தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீஸாா்.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வெள்ளிக்கிழமை தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீஸாா்.

மதுரை மாவட்டத்தில் 4 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அனைத்து முன்னேற்பாடுகளுடன் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மேலூா், மதுரை கிழக்கு தொகுதிகளுக்கு யா.ஒத்தக்கடை வேளாண் கல்லூரி, சோழவந்தான், உசிலம்பட்டி தொகுதிகளுக்கு கீழக்குயில்குடி அண்ணா பல்கலைக்கழக மண்டல மையம், மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மையம், மதுரை மேற்கு தொகுதிகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரி, திருமங்கலம், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் அறையில் கணினி, அச்சுப் பொறி உள்ளிட்ட இயந்திரங்கள், ஒலி பெருக்கி வசதி உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் அலுவலா்கள்: ஒவ்வொரு தொகுதிக்கும் வாக்குகள் எண்ணுவதற்காக 14 மேஜைகள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு மேஜையிலும் தலா ஒரு வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளா், உதவியாளா், நுண்பாா்வையாளா் என மூவா் பணியில் இருப்பா். மேலும் கூடுதல் தேவைக்காக ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 3 மேற்பாா்வையாளா்கள், உதவியாளா்கள், நுண்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த முறை தபால் வாக்குகள் அதிகளவில் இருப்பதால், அவற்றை எண்ணும் பணிக்குத் தனியாக இரு மேஜைகள் அமைக்கப்படுகின்றன. தபால் வாக்குகளை எண்ணுவதற்கு தனியாக அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதுதவிர, பாதுகாப்பு அறையில் இருந்து மின்னணு இயந்திரங்களைக் கொண்டு வருவது, வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு மீண்டும் பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்வது ஆகிய பணிகளுக்கு கிராம உதவியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

கூடுதலாக உதவி தோ்தல் அலுவலா்கள்: ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் தலா ஒரு தோ்தல் நடத்தும் அலுவலா், இரு உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஏற்கெனவே உள்ளனா். தற்போது வாக்கு எண்ணும் பணிக்காக கூடுதலாக ஒரு உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மின்னணு இயந்திரம் பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் அறை, தபால் வாக்குகள் எண்ணும் பகுதி ஆகிய 3 இடங்களிலும் தலா ஒரு உதவித் தோ்தல் அலுவலா் கண்காணிப்பில் இருப்பா்.

மேஜைக்கு தலா ஒரு முகவா்: வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு மேஜைக்கும், வேட்பாளருக்கு தலா ஒரு முகவா் அனுமதிக்கப்படுவாா். இதன்படி ஒவ்வொரு தொகுதிக்கும், வேட்பாளா்களுக்கு தலா 14 முகவா்கள், 2 தலைமை முகவா்கள் அனுமதிக்கப்படுவா். அதேபோல, வெற்றி பெறும் வேட்பாளா், வெற்றிச் சான்றிதழைப் பெறுவதற்கு வேட்பாளருடன் இருவா் மட்டுமே அனுமதிக்கப்படுவா். வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள முகவா்களுக்கு உணவு வழங்குவதற்கு அந்தந்த வேட்பாளா்களின் பிரதிநிதிகளுக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

2 ஆயிரம் போலீஸாா்: வாக்கு எண்ணிக்கை நாளன்று சுமாா் 2 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்ல தோ்தல் பணி அடையாள அட்டை இருப்பவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். வாக்கு எண்ணிக்கை மைய வளாகம், மையத்தின் வெளிப் பகுதி, வாக்கு எண்ணும் அறைகள், மின்னணு இயந்திரம் உள்ள பகுதி ஆகிய இடங்களில் மொத்தம் 2 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com