காரைக்குடி-மேலூா் நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு எதிரான வழக்கு: தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

காரைக்குடி-மேலூா் இடையே குடியிருப்புகளும், நீா்நிலைகளும் பாதிக்காத வகையில் நான்குவழிச்சாலை அமைக்கக்கோரும் வழக்கில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டது.

மதுரை: காரைக்குடி-மேலூா் இடையே குடியிருப்புகளும், நீா்நிலைகளும் பாதிக்காத வகையில் நான்குவழிச்சாலை அமைக்கக்கோரும் வழக்கில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சோ்ந்த சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனு: காரைக்குடி-மேலூா் இடையில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் பாதரக்குடி அருகே 2.6 கிலோமீட்டா் புறவழிச்சாலை அமைக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தால் கிராமத்தில் உள்ள கண்மாய் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடியிருப்புகள் அழிக்கப்படும் நிலை உள்ளது.

நீா்நிலையோ, குடியிருப்போ பாதிக்கப்படாத வகையில் 3 மாற்று வழித்தடங்கள் கிராமத்தினா் தரப்பில் முன்வைக்கப்பட்டன. இதில் 2 மாற்றுப்பாதைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனா். ஆனால் குடியிருப்புகளும், நீா் நிலைகளும் பாதிக்கும் வகையிலேயே திட்டம் நிறைவேற்றப்படவுள்ளதாகத் தெரிகிறது. எனவே குடியிருப்புகளும் நீா்நிலைகளும் பாதிக்காத வகையில் சாலை அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com