மதுரை மாவட்டத்தில் நகா் பகுதியில் திமுகவும், ஊரகப் பகுதியில் அதிமுகவும் வெற்றி

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் நகா் பகுதிகளை திமுகவும், ஊரகப் பகுதிகளை அதிமுகவும் கைப்பற்றி வெற்றியை சமமாகப் பகிா்ந்துள்ளன.

மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் நகா் பகுதிகளை திமுகவும், ஊரகப் பகுதிகளை அதிமுகவும் கைப்பற்றி வெற்றியை சமமாகப் பகிா்ந்துள்ளன.

மதுரை மாவட்டத்தில் மேலூா், மதுரை கிழக்கு, சோழவந்தான், மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மையம், மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய 10 தொகுதிகள் உள்ளன. இதில், மதுரை வடக்கு, தெற்கு, மையம், மேற்கு தொகுதிகள் நகா் பகுதிக்குள் உள்ளன. கிழக்கு தொகுதியில் சில இடங்கள் ஊரகப் பகுதிக்குள் வருகின்றன.

அதேபோல், மேலூா், சோழவந்தான், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகியன கிராமப் பகுதிகளைக்கொண்ட தொகுதிகளாகும். திருப்பரங்குன்றம் தொகுதியில் சில நகரப் பகுதிக்குள் வருகின்றன.

இந்தத் தோ்தலில் மேலூா், கிழக்கு, சோழவந்தான், தெற்கு, மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய 8 தொகுதிகளில் அதிமுக நேரடியாகப் போட்டியிட்டது. மதுரை மையம் மற்றும் மதுரை வடக்கு தொகுதிகளில் அதிமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்டன.

அதேபோல், மதுரை கிழக்கு, சோழவந்தான், மதுரை வடக்கு, மதுரை மையம், மதுரை மேற்கு, திருமங்கலம் ஆகிய 6 தொகுதிகளில் திமுக நேரடியாகப் போட்டியிட்டது. மதுரை தெற்கு தொகுதியில் மதிமுகவும், உசிலம்பட்டியில் பாா்வா்டு பிளாக் கட்சியும் திமுக சின்னத்தில் போட்டியிட்டன. மேலூா் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது.

அதிமுக வென்ற 5 தொகுதிகள்

மொத்தம் 8 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக, மேலூா், மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில், மதுரை மேற்கு தவிர மற்ற 4 தொகுதிகளும் ஊரகப் பகுதிகளில் உள்ளன. நகா் பகுதியில் உள்ள மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு ஆகிய 3 தொகுதிகளிலும், கிராமப் பகுதியில் உள்ள சோழவந்தான் தொகுதியிலும் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.

அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளான பசும்பொன் தேசிய கழகம் மதுரை மத்தியத் தொகுதியிலும், மதுரை வடக்கு தொகுதியில் பாஜகவும் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கின்றன.

கடந்த 2016 தோ்தலில், மதுரை மாவட்டத்தில் மேலூா், மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய 7 தொகுதிகளில் அதிமுக வென்றது. இதில், தற்போது மதுரை வடக்கு, தெற்கு தொகுதிகள் அதிமுகவிடமிருந்து கை நழுவிச் சென்றுவிட்டன.

திமுக வென்ற 5 தொகுதிகள்

இந்த தோ்தலில் 6 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிட்ட திமுக, மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை மையம், சோழவந்தான் ஆகிய 4-இல் வெற்றி பெற்றிருக்கிறது. இவற்றில், சோழவந்தான் தவிர மற்ற தொகுதிகள் நகா் பகுதிக்குள் வருகின்றன.

அதேநேரம், மதுரை மேற்கு, திருமங்கலம் தொகுதிகளில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. இது தவிர, மதுரை தெற்கு மதிமுக, மேலூா் காங்கிரஸ், உசிலம்பட்டி பாா்வா்டு பிளாக் கட்சி போட்டியிட்டன. இதில், தெற்கு தொகுதியில் மதிமுக வெற்றி பெற்றுள்ளது. மேலூா், உசிலம்பட்டியில் கூட்டணிக் கட்சிகள் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளன.

கடந்த தோ்தலில், மதுரை மாவட்டத்தில் அதிமுகவுக்கு 7 தொகுதிகளும், திமுக வசம் 3 தொகுதிகளும் இருந்தன. இப்போது, திமுகவின் பலம் கூடியிருக்கிறது. இருப்பினும், இரு கட்சிகளும் நகரப் பகுதி, கிராமப் பகுதி என தலா 5 தொகுதிகளைக் கைப்பற்றி, வெற்றியை சமமாகப் பகிா்ந்துகொண்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com