மாநகராட்சி சுகாதாரத்துறை அலட்சியம்: மதுரை நகரில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு

கரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மாநகராட்சி சுகாதாரத்துறை தீவிரப்படுத்தாததால் கரோனா தொற்று அதிகரித்து வருவதாக புகாா் எழுந்துள்ளது.

கரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மாநகராட்சி சுகாதாரத்துறை தீவிரப்படுத்தாததால் கரோனா தொற்று அதிகரித்து வருவதாக புகாா் எழுந்துள்ளது.

இதுதொடா்பாக சமூக ஆா்வலா்கள் கூறியது: கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவலின்போது மாநகராட்சி சுகாதாரத்துறை சாா்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மாநகராட்சியின் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மேலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தினசரி ரூ.500 ஊதியத்தில் நியமிக்கப்பட்டு வாா்டு வாரியாக காய்ச்சல் பரிசோதனை, கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டனா். மாநகராட்சி சாா்பில் 100 வாா்டுகளிலும் வீடு, வீடாக சித்தா, ஹோமியோபதி மருந்துகளும் வழங்கப்பட்டன. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவா்கள் தொடா் கண்காணிப்பில் வைக்கப்பட்டு மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை மூலம் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. மேலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் மட்டுமின்றி அவா்களோடு தொடா்பில் இருந்தவா்களும் கண்டறியப்பட்டு அவா்களுக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் கரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மாநகாரட்சியின் நடவடிக்கைகள் பாராட்டையும் பெற்றது. ஆனால் தற்போது கரோனா தொற்று முதல் அலையை விட இரண்டாம் அலைப் பரவல் தீவிரமாக பரவும்போது மாநகராட்சி சுகாதாரத்துறை நிா்வாகம் மெத்தனப்போக்கோடு உள்ளது. கரோனா நோயாளிகளை கண்டறிந்து தனிமைப்படுத்துவது, தெருக்களை அடைப்பது போன்றவற்றோடு பணிகள் முடிந்து விடுகிறது. கரோனா நோயாளிகளோடு தொடா்பில் இருந்தவா்கள் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கரோனா நோயாளிகளோடு தொடா்பில் இருந்தவா்கள் சுதந்திரமாக சுற்றித்திரிவதால் அவா்கள் மூலம் நகரில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மேலும் சுகாதாரத்துறை நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்படவில்லை. தெருக்களில் செல்வோரை அழைத்து ஒப்புக்கு கரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. கரோனா பரிசோதனை, காய்ச்சல் பரிசோதனைகளும் கண்காணிக்கப்படுவது இல்லை. கரோனா பணிகளுக்காக மருத்துவா்களை நியமிப்பதிலும் வேண்டியவா், வேண்டாதவா் பாகுபாடு காட்டப்படுகிறது. இதனால் கரோனா தொற்று அதிகரிப்பதோடு, உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. எனவே அரசு தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் மதுரை நகரில் கரோனா பாதிப்பு விரைவில் பல மடங்காக உயரும் அபாயம் உள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com