தமிழகத்தில் எத்தனை ஆக்சிஜன் தயாரிப்பு மையங்கள் செயல்படாமல் உள்ளன? உயா்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் எத்தனை ஆக்சிஜன் தயாரிப்பு மையங்கள் செயல்படாமல் உள்ளன என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை கேள்வி எழுப்பியது.

தமிழகத்தில் எத்தனை ஆக்சிஜன் தயாரிப்பு மையங்கள் செயல்படாமல் உள்ளன என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை கேள்வி எழுப்பியது.

மதுரையைச் சோ்ந்த வெரோனிகா மேரி தாக்கல் செய்த மனு: திருச்சியில் பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்கும் 3 பிளான்ட்கள் உள்ளன. இதில் ஒரு மணி நேரத்திற்கு 140 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தயாரிக்க முடியும். ஆனால் 2003 ஆம் ஆண்டிலிருந்து இங்கு ஆக்சிஜன் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. இதனால் அந்தப் பிளான்ட்கள் செயல்படாமல் உள்ளன.

நாட்டில் கரோனா 2 ஆம் அலை வேகமாகப் பரவி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் ஆக்சிஜன் கிடைக்காமல் கரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனா். தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்க திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிப்பை மீண்டும் தொடங்க உத்தரவிட வேண்டும்.

நாட்டில் புனே, ஹைதராபாத்தில் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் கரோனா தடுப்பூசிகளை நாடு முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. செங்கல்பட்டில் மத்திய அரசுக்கு சொந்தமான தடுப்பூசி தயாரிக்கும் எச்எல்எல் பயோடெக் நிறுவனம் உள்ளது.

இந்த நிறுவனத்தில் கரோனா தடுப்பூசி தயாரித்தால் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசி விரைவில் கிடைக்கும். எனவே இங்கு கரோனா தடுப்பூசி தயாரிக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த சம்பவத்தைப் பாா்க்கும்போது தமிழகத்தில் ஆக்சிஜன் தேவையின் முக்கியத்துவம் தெரிகிறது. இதனால் தமிழகத்தில் மாவட்டம் வாரியாக ஆக்சிஜன் தேவை எந்த அளவு உள்ளது. தமிழகத்தில் எத்தனை ஆக்சிஜன் தயாரிப்பு மையங்கள் செயல்படாமல் உள்ளன. இதில் எத்தனை மையங்களை உடனடியாகச் செயல்படுத்த முடியும். செங்கல்பட்டு எச்எல்எல் பயோடெக் நிறுவனத்தில் கரோனா தடுப்பூசி தயாரிக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மே 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com