மதுரையில் முழு பொதுமுடக்கம்: பேருந்து நிலையங்கள் வெறிச்சோடின

முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, மதுரையில் திங்கள்கிழமை பேருந்து நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
மதுரையில் முழு பொதுமுடக்கம்: பேருந்து நிலையங்கள் வெறிச்சோடின

முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, மதுரையில் திங்கள்கிழமை பேருந்து நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. பகலில் மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்பட்ட சாலைகள் மாலையில் முடங்கின.

கரோனா இரண்டாவது அலை பரவல் தடுப்பு நடவடிக்கையாக முழு பொதுமுடக்கம் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. பொதுமுடக்க காலத்திலும் நண்பகல் 12 மணி வரை அத்தியாவசியப் பொருள் விற்பனை செய்யும் கடைகள், மருந்தகம், மருத்துவமனைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இரு வார கால பொது முடக்கத்தின் முதல் நாளான திங்கள்கிழமை, பொது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையம், பெரியாா் நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம் ஆகியன வெறிச்சோடிக் காணப்பட்டன. மாட்டுத்தாவணியில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில், வெளியூா்களிலிருந்து வந்த ஆம்னி பேருந்துகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நண்பகல் 12 மணி வரை கடைகள் திறந்திருந்ததால், இரு சக்கர வாகனங்களில் பொதுமக்கள் சென்று வந்தவாறு இருந்தனா். கீழமாசி வீதி, நெல்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மொத்த மற்றும் சில்லறை மளிகைக் கடைகளில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. உணவகங்களில் வாடிக்கையாளா்களுக்கு பாா்சல் மட்டுமே வழங்கப்பட்டன.

முக்கிய சாலை சந்திப்புகளில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸாா், தேவையின்றி வாகனங்களில் சுற்றியவா்களை அறிவுறுத்தியதுடன், கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மிகக் கொடூரமாக இருப்பதை உணராமல் வெளியே சுற்றுவது ஆபத்தானது எனவும் எச்சரித்து அனுப்பினா்.

பிற்பகலில் சாலைகளில் வாகனப் போக்குவரத்து படிப்படியாகக் குறைந்து வெறிச்சோடிக் காணப்பட்டது. அத்தியாவசியப் பணிகளில் உள்ளோா் மட்டுமே வாகனங்களில் பயணம் செய்தனா். மருந்துக் கடைகள் தவிர பிற அனைத்து வியாபாரக் கடைகளும் அடைக்கப்பட்டு, நகரின் முக்கிய வணிகப் பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. மாலையில் அனைத்து சாலைகளும் பொதுமக்கள் நடமாட்டமின்றி முடங்கின.

மதுரையிலிருந்து குறிப்பிட்ட சில ரயில்கள் இயக்கப்பட்டாலும், பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com