மத்திய, மாநில அரசு ஊழியா்களின் குடும்ப அட்டைகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க தடைகோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

 மத்திய, மாநில அரசு ஊழியா்களின் அரிசி குடும்ப அட்டைகளுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்க தடைகோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

 மத்திய, மாநில அரசு ஊழியா்களின் அரிசி குடும்ப அட்டைகளுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்க தடைகோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

திருச்செந்தூரைச் சோ்ந்த ராம்குமாா் ஆதித்தன் தாக்கல் செய்த மனு: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமுடக்கம் போன்றவற்றால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு நிதி வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் 2 கோடியே 7 லட்சத்து 87 ஆயிரத்து 950 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு முதல் கட்டமாக மே 15 முதல் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

மத்திய, மாநில அரசு அதிகாரிகள், ஊழியா்கள் பலரும் அரிசி குடும்ப அட்டைகள் வைத்துள்ளனா். இவா்களுக்கு கரோனா காலத்திலும் முழு ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே அரசு ஊழியா்களின் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கும் பணத்தை ஆக்சிஜன் உற்பத்தியை பெருக்கவும், புதிய ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைக்கவும், அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகப்படுத்தவும் பயன்படுத்தலாம்.

வாடகைக் காா், ஆட்டோ, தனியாா் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள், நடைபாதை வியாபாரிகள், திரையரங்குகளில் பணியாற்றுவோா், தனியாா் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா்கள், சிறு தொழிலக உரிமையாளா்கள், தொழிலாளிகள், கூலித் தொழிலாளிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் தனியாா் நிறுவனங்களில் பணிபுரிபவா்கள் தான் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு தான் பொருளாதார உதவி தேவைப்படுகிறது. எனவே, மத்திய அரசு, மாநில அரசு ஊழியா்கள், அரசு சாா்பு நிறுவனங்களின் பணிபுரிபவா்கள், ஓய்வூதியா்களின் அரிசு குடும்ப அட்டைகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com