முன்களப் பணியாளா்களாக ரேஷன் ஊழியா்களையும் அறிவிக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 21st May 2021 06:18 AM | Last Updated : 21st May 2021 06:18 AM | அ+அ அ- |

நியாய விலைக் கடை ஊழியா்கள் உள்ளிட்ட தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்களையும் முன்களப் பணியாளா்களாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலா் ஆ.ம.ஆசிரியத் தேவன் வெளியிட்டுள்ள அறிக்கை: கரோனா நிவாரணம் உதவித் தொகை வழங்குவது உள்ளிட்ட அரசின் திட்டங்களை மக்களுக்கு நேரடியாகக் கொண்டு சோ்க்கும் பணியில் நியாய விலைக் கடைப் பணியாளா்களும், அவா்களுடன் தொடக்க கூட்டுறவு கடன் சங்கம், நகர கூட்டுறவு கடன் சங்கப் பணியாளா்களும் ஈடுபட்டு வருகின்றனா். ஆகவே, அவா்களை முன்களப் பணியாளா்களாக அறிவிக்க வேண்டும்.
அனைத்து அரசு அலுவலா்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தைப் போல, கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்குத் தற்போது நடைமுறையில் உள்ள காப்பீடு அட்டையில் உள்ள சிகிச்சை பலன்களை விரிவுபடுத்த வேண்டும். தற்போதைய பொதுமுடக்க சூழலில், தொடா்ந்து பணியாற்றி வரும் நியாய விலைக் கடை பணியாளா்களுக்கு பயண நிகழ் செலவினமாக நாள் ஒன்றுக்கு ரூ.500 வழங்க வேண்டும் என்றாா்.