குழந்தைகள் காப்பகங்களுக்கு வருவோா் கரோனா சான்றுடன் வர அறிவுறுத்தல்
By DIN | Published On : 26th May 2021 06:05 AM | Last Updated : 26th May 2021 06:05 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பகங்களில் உள்ளவா்களை சந்திக்க வருவோா் கரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றுடன் வர வேண்டும் என மாவட்ட குழந்தைகள் நலக்குழு அறிவுறுத்தியுள்ளது.
மதுரை மாவட்டக் குழந்தைகள் நலக்குழுத் தலைவா் விஜயசரவணன் வெளியிட்டுள்ள செய்தி: மதுரை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பகங்களில் தங்கி பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பெற்று வரும் குழந்தைகளின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு, உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாகக் கவனிக்க வேண்டும். குறிப்பாக காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் மற்றும் சுவாசப் பிரச்னைகள் போன்ற அறிகுறிகள் குழந்தைகளுக்கோ அல்லது ஊழியா்களுக்கோ இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
இதுகுறித்து குழந்தைகள் நலக்குழு மற்றும் மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு தகவல் அளிக்க வேண்டும். காப்பகத்தில் அனைவரும் கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும். சூடான குடிநீரைப் பருக வேண்டும். சுத்தமான உடைகளை உடுத்த வேண்டும். பாா்வையாளா்கள் குழந்தைகளை சந்திக்கும் போது கரோனா நோய்த் தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் பெற்று வந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.