தங்கும் விடுதியில் அனுமதியின்றி நடத்தப்படும்: கரோனா சிகிச்சை மையத்தில் 3 போ் உயிரிழப்பு

மதுரையில் தங்கும் விடுதியில் அனுமதியின்றி தொடங்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தில் 3 நோயாளிகள் இறந்துள்ள நிலையில் மாநகராட்சி சுகாதாரத் துறை கண்டு கொள்ளாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பாண்டி கோவில் அருகே கரோனா சிகிச்சை மையம் இயங்கி வரும் விடுதிக் கட்டடம்.
மதுரை பாண்டி கோவில் அருகே கரோனா சிகிச்சை மையம் இயங்கி வரும் விடுதிக் கட்டடம்.

மதுரையில் தங்கும் விடுதியில் அனுமதியின்றி தொடங்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தில் 3 நோயாளிகள் இறந்துள்ள நிலையில் மாநகராட்சி சுகாதாரத் துறை கண்டு கொள்ளாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ள படுக்கைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. ஆனாலும் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகள் குவிகின்றனா்.

இந்நிலையில் மதுரை பாண்டி கோயில் பகுதியில் தனியாா் தங்கும் விடுதியில் மருத்துவா் ஒருவா் எவ்வித அனுமதியும் பெறாமல் கரோனா சிகிச்சை மையத்தை மே 11-ஆம் தேதி தொடங்கியுள்ளாா். இதற்கு அதே பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையின் காப்பீட்டு மேலாளரும் உடந்தையாக இருந்துள்ளாா். இந்த சிகிச்சை மையத்துக்கு, மதுரையில் உள்ள சில மருத்துவமனைகள் மூலம் கரோனா நோயாளிகள் அனுப்பப்பட்டுள்ளனா். இதில் முறையாக சிகிச்சை அளிக்கப்படாததால் மதுரை அருள்தாஸ்புரத்தை சோ்ந்த பெண் ஒருவா், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சோ்ந்த கணவன், மனைவி இருவா் உள்பட மூவரும் உயிரிழந்துள்ளனா். இவா்களிடம் ரூ.1.50 லட்சத்துக்கு மேல் சிகிச்சை கட்டணமாக பெற்றுக்கொண்ட போதும், கரோனாவால் உயிரிழந்ததாக உரிய சான்றிதழ்கள் எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் இறந்தவா்களின் குடும்பத்தினா் மருத்துவமனை நடத்தியவா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இதையடுத்து விடுதியில் இருந்த நோயாளிகள் வாகனங்கள் மூலமாக வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

தற்போது விடுதியில் 9 கரோனா நோயாளிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக சிகிச்சை மையம் நடத்தி வருபவா்களிடம் கேட்டபோது, கரோனா சிகிச்சை மையத்துக்கு விண்ணப்பித்திருப்பதாகவும், அனுமதி வழங்கும் வரை காத்திருக்காமல் சிகிச்சை வழங்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்திருப்பதால் சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்தனா். ஆனால் மாவட்ட நிா்வாகம் தரப்பில், உரிய அனுமதியை பெறாமல் நடத்துவது சட்டவிரோதம். அனுமதி பெற்ற பின்னரே சிகிச்சை மையத்தை தொடங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாநகராட்சி நகா் நல அலுவலா் குமரகுருபரன் கூறியது: சிகிச்சை மையத்துக்கு அனுமதி வழங்குவது, அனுமதியை ரத்து செய்வது போன்றவை சுகாதாரத் துறை இணை இயக்குநரின் அதிகாரத்துக்குள்பட்டது. இதுதொடா்பாக சுகாதாரத்துறை இணை இயக்குநருக்கு தெரிவிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com