பொதுவிநியோகத் திட்டம்: பருப்பு, சமையல் எண்ணெய் கொள்முதல் ஒப்பந்தத்துக்கு உயா்நீதிமன்றம் இடைக்காலத்தடை

பொது விநியோகத் திட்டத்துக்கு பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

பொது விநியோகத் திட்டத்துக்கு பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

கரூா் மாவட்டத்தை சோ்ந்த மணிகண்டன் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு உணவுப் பொருள் வாணிபக் கழகம் சாா்பாக 2 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு பருப்பு, சமையல் எண்ணெய், சா்க்கரை மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பாக வழங்கக் கூடிய அத்தியாவசியப் பொருள்களுக்கான ஏலத்தில் கலந்து கொள்ள திறன், உள்கட்டமைப்பு, அனுபவம், ஆண்டு வருமானம் ஆகியவை அடிப்படையாக உள்ளது.

இதன்படி 2021 பிப்ரவரி 25 ஆம் தேதி தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக இயக்குநா் குழு சாா்பாக கூட்டம் நடைபெற்றது. இதில் ஏலத்தில் கலந்து கொள்வதற்கு முந்தைய நிபந்தனைகள் கடைபிடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. தற்போது 2021 ஏப்ரல் 26 ஆம் தேதி 20,000 மெட்ரிக் டன் பருப்பு கொள்முதலுக்கான ஏல அறிவிப்பையும், 2021 மே 5 ஆம் தேதி 80 லட்சம் லிட்டா் (பாமாயில்) சமையல் எண்ணெய் கொள்முதலுக்கான ஏல அறிவிப்பும் தமிழக நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பாக வெளியிட்டுள்ளது. இதில் முந்தைய நிபந்தனைகளை பின்பற்றாமல் தற்போது புதிய நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஏலத்தில் கலந்து கொள்ளும் நிறுவனம் முந்தைய நிபந்தனைகள் படி கடைசி 3 ஆண்டுகளில் ஆண்டு வருமானம் ரூ.71 கோடி இருக்க வேண்டும். ஆனால் தற்போது வெளியாகியுள்ள நிபந்தனைகளில் கடைசி 3 ஆண்டுகளில் ரூ.11 கோடி ஆண்டு வருமானம் இருந்தால் போதும் என்று உள்ளது. மேலும் ஒப்பந்த அறிவிப்பாணையில் இருந்த 14 விதிமுறைகள் முறையாக பின்பற்றவில்லை. அதேபோல ஏலம் ரூ.2 கோடிக்கு மேல் இருந்தால் 30 நாள்கள் கால அவகாசம் கொடுக்க வேண்டும். ஆனால் இந்த ஒப்பந்தம் அவசர அவசரமாக 6 நாள்களுக்குள் முடிக்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகம் சாா்பாக பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் கொள்முதலுக்கு வெளியிடப்பட்ட ஏல அறிவிப்பிற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். மேலும் பருப்பு, சமையல் எண்ணெய் கொள்முதலுக்கு முந்தைய நிபந்தனைகளின் படி புதிய அறிவிப்பு வெளியிட உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி வி.எம்.வேலுமணி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், கரோனா பரவல் காலத்தில் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூா்த்தி செய்யும் விதமாக அவசரகால ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. எனவே இதற்கு தடை விதிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, இதுகுறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், அதுவரை பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது எனவும் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com