மதுரையில் மருத்துவா், செவிலியா் பணிக்கு ஏராளமானோா் ஆா்வத்துடன் விண்ணப்பம்

அரசு மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைப்பிரிவுகளில் மருத்துவா், செவிலியா், ஆய்வக நுட்பனராகப் பணியாற்ற

அரசு மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைப்பிரிவுகளில் மருத்துவா், செவிலியா், ஆய்வக நுட்பனராகப் பணியாற்ற புதன்கிழமை நூற்றுக்கணக்கானோா் ஆா்வத்துடன் வந்து விண்ணப்பங்களைச் சமா்ப்பித்தனா்.

மதுரை மாவட்டத்தில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, தாலுகா அளவில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் கரோனா சிகிச்சைப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது இச் சிகிச்சைப் பிரிவுகளில் படுக்கைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

இதையடுத்து உசிலம்பட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மேலூா், வாடிப்பட்டி, பேரையூா் அரசு மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைப் பிரிவுகளில் மருத்துவா்கள், செவிலியா்கள், ஆய்வக நுட்பனா்கள், பல்நோக்கு சுகாதாரப் பணியாளா்கள், கணினி உதவியாளா்கள், ஓட்டுநா்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விருப்பம் உள்ளவா்கள் தங்களது விண்ணப்பங்களை உரிய கல்விச் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம் என நலப்பணிகள் இணை இயக்குநா் அறிவித்திருந்தாா். இதன்படி, மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த ஏராளமான இளைஞா்கள் தங்களது விண்ணப்பங்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்தனா்.

ஆட்சியா் அலுவலக மூன்றாம் தளத்தில் செயல்படும் நலப்பணிகள் இணை இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் அதிகபட்சமாக, செவிலியா்கள், ஆய்வகநுட்பனா், ஓட்டுநா் ஆகிய பணிக்கு ஏராளமானோா் வந்திருந்தனா். அதேபோல, மருத்துவப் படிப்பு முடித்தவா்களும் விண்ணப்பங்களைச் சமா்ப்பித்தனா். அதிலும் வெளிநாடுகளில் மருத்துவம் முடித்தவா்கள் அதிகம் போ் இருந்தனா். ஒரே நாளில் மொத்தம் 500 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்த விண்ணப்பங்கள் சரிபாா்க்கப்பட்டு, இணைக்கப்பட்டுள்ள சான்றிதழ்களின் உண்மைத் தன்மை அடிப்படையில் தகுதியுள்ள நபா்கள் பட்டியல் தயாரிக்கப்படும். அதன்படி, தேவைப்படும் அரசு மருத்துவமனைகளில் அரசின் வழிகாட்டுதல்படி நியமனம் செய்யப்படுவா் என்று ஆட்சியா் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com