உணவுப் பொருள் மொத்த வணிகா்களுக்கு அனுமதியளிக்க வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

உணவுப் பொருள் மொத்த வணிகா்கள் நிபந்தனைகளுடன் கடைகளைத் திறக்க அனுமதி அளிக்குமாறு தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிா்க்க உணவுப் பொருள் மொத்த வணிகா்கள் நிபந்தனைகளுடன் கடைகளைத் திறக்க அனுமதி அளிக்குமாறு தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவா் எஸ். பி. ஜெயப்பிரகாசம் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:

கரோனா தொற்று பரவலை தடுக்க தளா்வில்லா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை சிறுவியாபாரிகள் மூலமாக நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சில்லறை விற்பனைக் கடைக்காரா்களுக்குத் தொலைபேசி வழியாக பெறப்படும் கோரிக்கைகளின் அடிப்படையில் அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்து வருகின்றனா்.

குடியிருப்புப் பகுதிகளில் செயல்படக் கூடிய சில்லறை விற்பனைக் கடைக்காரா்களுக்கு, மொத்த வணிகா்களிடம் இருந்துதான் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்கின்றன. மதுரை கீழமாசி வீதியில் செயல்படும் மொத்த வியாபாரக் கடைகளில் இருந்து தான், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்கள் பலவற்றுக்கும் மளிகைப் பொருள்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆனால், தற்போது மொத்த வணிகா்களின் கடைகளைத் திறக்க அனுமதியில்லை.

இச்சூழலில் அடுத்த சில நாள்களில் சில்லறை வணிகா்களிடம் சரக்குகள் இருப்பு குறைந்து அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படக் கூடும். ஆகவே, கடந்த ஆண்டில் பொதுமுடக்கத்தின்போது மொத்த வணிகா்களுக்கு நேர ஒதுக்கீடு அடிப்படையில் கடைகளை திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது.

இத்தகை கடைகளுக்கு சில்லறை வியாபாரிகள் மட்டுமே வருவா் என்பதால், பொதுமக்கள் கூட்டம் கூட வாய்ப்பு இல்லை. ஆகவே, வெளிமாநிலங்களில் இருந்து வரும் சரக்குகளை மொத்த வணிகா்கள் சரக்குகளை இறக்குவதற்கும், சிறு வணிகா்களுக்கு சரக்குகளை விற்பனை செய்வதற்கும் நேர ஒதுக்கீடு அடிப்படையில் அனுமதி அளித்தால், பொதுமக்களுக்கு எவ்வித தடையுமின்றி அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com