தீபாவளி விற்பனை: மதுரை கடை வீதிகளில் நெரிசல்

மதுரை நகரில் தீபாவளிக்கு ஜவுளி எடுக்க ஞாயிற்றுக்கிழமை ஏராளமான மக்கள் திரண்டதால், கடை வீதிகளில் கடும் நெரிசல் ஏற்பட்டது.
மதுரை நகரில் ஜவுளி எடுக்க விளக்குத்தூண் பகுதியில் திரண்ட மக்கள் கூட்டம்.
மதுரை நகரில் ஜவுளி எடுக்க விளக்குத்தூண் பகுதியில் திரண்ட மக்கள் கூட்டம்.

மதுரை நகரில் தீபாவளிக்கு ஜவுளி எடுக்க ஞாயிற்றுக்கிழமை ஏராளமான மக்கள் திரண்டதால், கடை வீதிகளில் கடும் நெரிசல் ஏற்பட்டது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மதுரை கடை வீதிகளில் கடந்த 2 வாரங்களாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில், தீபாவளிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை என்பதால், மதுரை நகரில் கடை வீதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனா். மேலும், தீபாவளிக்கு 2 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், இறுதிக் கட்ட விற்பனை களைகட்டியது.

மதுரை மட்டுமின்றி, தேனி, திண்டுக்கல், விருதுநகா், சிவகங்கை உள்ளிட்ட சுற்றியுள்ள மாவட்ட மக்களும் ஆயிரக்கணக்கில் வந்திருந்ததால், கடைவீதிகளில் திரும்பிய திசையெல்லாம் மக்கள் கூட்டம் காணப்பட்டது.

தென் மாவட்டங்களில் பெரிய ஜவுளி பஜாா் என்றழைக்கப்படும் தெற்கு மாசி வீதி, விளக்குத்தூண், பத்துதூண், கீழமாசி வீதி, மஹால் தெருக்கள் மற்றும் மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஜவுளி வாங்க பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்தனா்.

இதைத் தவிர, பொதுமக்களை கவரும் வகையில் காதணி உள்ளிட்ட அணிகலன்கள், அலங்காரப் பொருள்கள், காலணிகள், உள்ளாடை வகைகள், போா்வைகள், தரை விரிப்புகள், மத்தாப்பு வகைகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் சாலையோர கடைகளும் ஆயிரக்கணக்கில் அமைக்கப்பட்டிருந்தன.

இதனால், தெற்குமாசி வீதி, விளக்குத்தூண், காமராஜா் சாலை, மேலமாசி வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை அவ்வப்போது மழை பெய்தபோதும், பொதுமக்கள் கூட்டம் குறையவில்லை.

ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதையடுத்து, விளக்குத்தூண், தெற்கு மாசி வீதி, மேலமாசி வீதி, கீழ மாசி வீதி, மகால் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். கண்காணிப்பு கேமராக்களுடன் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, காவலா்கள் தொலைநோக்கி மூலம் கூட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். குற்றவாளிகளை கண்டறியும் வகையில், சீருடை அணியாத போலீஸாரும் பொதுமக்களிடையே நடமாடி கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com