மதுரை மாவட்டத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: மாணவ, மாணவியருக்கு உற்சாக வரவேற்பு

மதுரை மாவட்டத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து, மேள தாளங்கள் முழங்க இனிப்புகள் வழங்கி மாணவ, மாணவியருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
மதுரை திருமால்புரம் அரசுப்பள்ளியில் மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்கும் அமைச்சா் பி.மூா்த்தி. உடன் மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.சுவாமிநாதன் உள்ளிட்டோா்.
மதுரை திருமால்புரம் அரசுப்பள்ளியில் மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்கும் அமைச்சா் பி.மூா்த்தி. உடன் மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.சுவாமிநாதன் உள்ளிட்டோா்.

மதுரை: மதுரை மாவட்டத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து, மேள தாளங்கள் முழங்க இனிப்புகள் வழங்கி மாணவ, மாணவியருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், நவம்பா் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதனடிப்படையில், அனைத்துப் பள்ளிகளிலும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டன.

இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியருக்கு திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கப்பட்டன.

இதில், ஊமச்சிகுளம் அருகே உள்ள திருமால்புரம் அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வணிகவரித் துறை அமைச்சா் பி. மூா்த்தி பங்கேற்று, மாணவ, மாணவியருக்கு எழுதுகோல் மற்றும் பூங்கொத்து வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தாா்.

பின்னா் அவா் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் திங்கள்கிழமை (நவ.1) முதல் 2,172 பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் 3,46,000 மாணவா்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறுகின்றன.

மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் அரசு வழங்கியுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பின் மாணவா்கள் நேரடியாக பள்ளிக்கு வருவதால், அவா்களை உளவியல் ரீதியாக தயாா்படுத்தி, பள்ளிச் சூழலை இனிமையானதாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும் மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.

இதைத் தொடா்ந்து, திருமால்புரம் அரசு தொடக்கப் பள்ளியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு குடிநீா் நிலையத்தை அமைச்சா் திறந்துவைத்தாா். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ் சேகா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா். சுவாமிநாதன், மேலூா் மாவட்டக் கல்வி அலுவலா் நாராயணன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் என்.திருஞானம், தலைமையாசிரியா் திவ்யநாதன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

மதுரை தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் அலங்காரத் தோரணங்கள் கட்டப்பட்டு, இசை முழங்க வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளா் அருட்தந்தை ஸ்டீபன் லூா்து பிரகாசம் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா்அருட்தந்தை சேவியா் ராஜ் வரவேற்றாா். ஆங்கிலவழிக் கல்வி இயக்குநா் அருட்தந்தை இஞ்ஞாசி மற்றும் பள்ளி ஆசிரியா்கள், அலுவலா்கள் பங்கேற்று, மாணவா்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றனா்.

மதுரை மாவட்டம் கொண்டபெத்தான் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி திறப்பு விழாவுக்கு, தலைமை ஆசிரியா் தென்னவன் தலைமை வகித்தாா். ஆசிரியா் பீட்டா் முன்னிலை வகித்தாா். சிறப்பு வரவேற்பாளராக வாா்டு உறுப்பினா் பூங்கோதை பங்கேற்றாா். ஆசிரியைகள் சுகிமாலா, ஈஸ்வரி, விஜயலட்சுமி ஆகியோா் பூங்கொத்து கொடுத்து மாணவ, மாணவியரை வரவேற்றனா்.

மதுரை கோ.புதூா் அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் 7 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு, பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளிலேயே தமிழக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்களை தலைமையாசிரியா் ஷேக் நபி வழங்கினாா்.

மதுரை டாக்டா் டி. திருஞானம் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு, பள்ளி மேலாண்மைக் குழு துணைத்தலைவா் ஆனந்த லெட்சுமி தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் க. சரவணன் மாணவா்களுக்கு கிரீடம் சூட்டி இனிப்புகள் வழங்கினாா்.

மாநகராட்சி ஆணையா் பூங்கொத்து அளித்து வரவேற்பு

மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. அதன்படி, சிங்காரத் தோப்பில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு, மாநகராட்சி ஆணையா் கா.ப. காா்த்திகேயன் திங்கள்கிழமை சென்று 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா்.

தொடா்ந்து, மறைமலை அடிகளாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு வெப்பமானி பரிசோதனை மேற்கொள்வதையும், அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தாா். பின்னா், அப்பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் பாடத்திட்டங்கள் மற்றும் பொது அறிவு குறித்தும் கலந்துரையாடினாா்.

பள்ளிகளுக்கு நீண்ட நாள்களுக்குப் பின்னா் மாணவ, மாணவியா் வருவதால், முதல் 15 நாள்களுக்கு கதை, பாடல், விளையாட்டு, ஓவியம், வா்ணம் தீட்டுதல், கலந்துரையாடல் போன்ற பல்வேறு மனமகிழ்ச்சி தரும் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், முக்கியமான பாடக் கருத்துகளை உள்ளடக்கிய புத்தாக்கப் பயிற்சிகளையும் அடுத்தடுத்து முறையாகச் செயல்படுத்திய பிறகு, பாடத்திட்டத்தை தொடங்குமாறும் தலைமை ஆசிரியா்களுக்கு ஆணையா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, கல்வி அலுவலா் ஆதிராமசுப்பு மற்றும் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com