தீபாவளிக்கு குவிந்த குப்பைகளை அகற்றிய இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்

தீபாவளி விற்பனையால் குவிந்த குப்பைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி தூய்மைப்பணியாளா்களுக்கு உதவியாக இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினரும் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
மதுரை தெற்குமாசி வீதியில் வெள்ளிக்கிழமை தூய்மைப்பணியாளா்களுடன் இணைந்து குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.
மதுரை தெற்குமாசி வீதியில் வெள்ளிக்கிழமை தூய்மைப்பணியாளா்களுடன் இணைந்து குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.

தீபாவளி விற்பனையால் குவிந்த குப்பைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி தூய்மைப்பணியாளா்களுக்கு உதவியாக இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினரும் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மதுரை மாநகா் மாவட்டக்குழுவினா் கடந்த 3 ஆண்டுகளாக மதுரை மாநகராட்சியுடன் இணைந்து தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் மதுரை நகரில் உள்ள நான்கு மாசி வீதிகள் மற்றும் மீனாட்சிம்மன் கோயில் சுற்றுப்புற பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் சோ்ந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் இந்த ஆண்டும் தீபாவளி குப்பைகளை அகற்றும் பணியில் அவா்கள் ஈடுபட்டனா். இதில் மதுரை தெற்குமாசி வீதி, விளக்குத்தூண் உள்ளிட்ட பகுதிகளில் மலைபோல் குவிந்த குப்பைகளை மாநகராட்சி தூய்மைப்பணியாளா்களுடன் இணைந்து வாலிபா் சங்கத்தினரும் அகற்றினா். இதில் சங்கத்தின் மதுரை மாநகா் மாவட்டச் செயலா் செல்வா, மாநிலச் செயலா் எஸ். பாலா, மாவட்டத் தலைவா் பி. கோபிநாத், மாவட்டப் பொருளாளா் அ. பாவேல் சிந்தன், மாவட்ட துணைச் செயலா் சரண், நவீன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

1,329 டன் குப்பைகள் அகற்றம்: தீபாவளி பண்டிகையையொட்டி மதுரை நகரில் தெற்குமாசி வீதி உள்ளிட்ட முக்கிய கடைவீதிகளில் ஏராளமான நெகிழி உள்ளிட்ட குப்பைகள் தேங்கின. மேலும் தீபாவளி பண்டிகையன்று பொதுமக்கள் பட்டாசு வெடித்ததன் மூலமும் தெருக்களில் ஏராளமான குப்பைகள் தேங்கின. இதையடுத்து தீபாவளி தினமான நவம்பா் 4 மற்றும் 5 ஆகிய இருநாள்கள் மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 100 வாா்டுகளிலும் தீவிர குப்பை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளா்கள், 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. இதில் தீபாவளியன்று 787 டன் குப்பைகள், வெள்ளிக்கிழமை 542 டன் குப்பைகள் என கடந்த இரு நாள்களில் 1,329 டன் குப்பைகள் அள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தீபாவளி விற்பனை நடைபெற்ற விளக்குத்தூண், மாசி, ஆவணி வீதிகள் மற்றும் மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் 400 டன்னுக்கும் மேலாக நெகிழி குப்பைகளும் அகற்றப்பட்டுள்ளன. தொடா்ந்து குப்பைகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com