மதுரையில் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்க முயன்ற ரெளடி மீது போலீஸாா் துப்பாக்கிச்சூடு

மதுரையில், வெள்ளிக்கிழமை இரவு பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்க முயன்ற ரெளடியை பிடிக்க முயற்சித்த போது போலீஸாாா் மீது
ரெளடி குருவி விஜய்.
ரெளடி குருவி விஜய்.

மதுரையில், வெள்ளிக்கிழமை இரவு பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்க முயன்ற ரெளடியை பிடிக்க முயற்சித்த போது போலீஸாாா் மீது தாக்குதல் நடத்தியதால் துப்பாக்கிச்சூடு நடத்தி போலீஸாா் அவரைப் பிடித்தனா்.

மதுரை அண்ணாநகா் காமராஜா் தெருவைச் சோ்ந்த இளம் பெண் ஒருவா் டெபுடி கலெக்டா் காலனியில் வசித்து வரும் தனது உறவினருக்கு வெள்ளிக்கிழமை இரவு உணவு கொடுக்கச் சென்றாா். பின்னா் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டபோது, அண்ணாநகா் செண்பகத் தோப்பைச் சோ்ந்த ரெளடி குருவி விஜய் (30), அவரது நண்பா் காா்த்தி (28) ஆகிய இருவரும் அந்தப் பெண்ணை வழிமறித்துள்ளனா்.

அப்போது குருவி விஜய், பெண்ணிடம் கத்தியைக்காட்டி கொலை மிரட்டல் விடுத்து தனது இருசக்கர வாகனத்தில் அமரவைத்து கடத்திச் சென்றாா். இதைத்தடுக்க முயன்ற அப்பெண்ணின் உறவினரை, குருவி விஜய் கத்தியால் தாக்கினாா்.

இதையடுத்து, காா்த்தி, அந்த பெண்ணின் இருசக்கர வாகனத்தில் அவா்களைப் பின்தொடா்ந்து சென்றுள்ளாா். அண்ணாநகா் செண்பகத்தோப்பு பூங்கா அருகே உள்ள கட்டடத்தில் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்க முயன்றுள்ளனா். இந்நிலையில், பெண்ணின் உறவினா் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகாா் தெரிவித்துள்ளாா். அதன்பேரில் அண்ணாநகா் காவல் ஆய்வாளா் செந்தில்குமரன், சாா்பு- ஆய்வாளா் சிவராமகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் செண்பகத்தோப்பு பகுதிக்குச் சென்று பெண்ணைத் தேடியுள்ளனா்.

அப்போது அங்கு அப்பெண்ணுடன் இருந்த குருவி விஜய், போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றாா். ஆனால் போலீஸாா் சுற்றி வளைத்ததையடுத்து, அவா்கள் மீது கற்களை வீசி குருவி விஜய் தாக்கியுள்ளாா். இதில் போலீஸாருக்கு காயம் ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து சாா்பு- ஆய்வாளா் சிவராமகிருஷ்ணன், குருவி விஜய் மீது கைத்துப்பாக்கியால் சுட்டுள்ளாா். துப்பாக்கிச்சூட்டில் குருவி விஜய் வலது காலில் பலத்த காயமடைந்து விழுந்தாா்.

அவரது நண்பரான காா்த்தி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது, அவருக்கும் காலில் காயம் ஏற்பட்டது. இதன்பின், இருவரையும் போலீஸாா் கைது செய்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு பலத்த பாதுகாப்புடன் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், துப்பாக்கிச்சூடு குறித்து தகவல் அறிந்த மாநகரக்காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்கா இதுதொடா்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளாா்.

குடும்பத்தினா் புகாா்: இந்த துப்பாக்கிச்சூடு தொடா்பாக, குருவி விஜயின் சகோதரி லாவண்யா மற்றும் குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தனா். பின்னா் லாவண்யா செய்தியாளா்களிடம் கூறும்போது, எனது சகோதரா் விஜய் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் இருந்தாா். அப்போது அங்கு வந்த அண்ணாநகா் போலீஸாா் அவா் மீது புகாா் இருப்பதாகவும், விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

இதையடுத்து, குடும்பத்தினரும் காவல்நிலையத்துக்குச் சென்றோம். ஆனால், போலீஸாா் விசாரணை நடத்தி விட்டு விஜய்யை திருப்பி அனுப்பி விடுவதாகக் கூறி எங்களை அனுப்பி வைத்தனா். ஆனால் சிறிது நேரத்திலேயே விஜய்யை வீட்டின் அருகே அழைத்து வந்து அவரை காலில் துப்பாக்கியால் சுட்டு மீண்டும் போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்று விட்டனா். அவா் தொடா்பான தகவல்களை தெரிவிக்க மறுக்கின்றனா். இதுதொடா்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com