பணியிடமாறுதலுக்கு எதிா்ப்பு: வணிகவரித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

வணிகவரித் துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைநிலை அலுவலா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு எதிா்ப்புத் தெரிவித்து
மதுரை வணிகவரித் துறை அலுவலக வளாகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வணிகவரித் துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா்.
மதுரை வணிகவரித் துறை அலுவலக வளாகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வணிகவரித் துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா்.

வணிகவரித் துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைநிலை அலுவலா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுரையில் வணிகவரித் துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வணிகவரித் துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கூட்டு நடவடிக்கைக் குழு மதுரை கோட்டத் தலைவா் அக்பா் பாட்சா, மாவட்டத் தலைவா் சரவணப் பெருமாள் ஆகியோா் தலைமை வகித்தனா். இதுகுறித்து கூட்டு நடவடிக்கைக் குழுவினா் கூறியது:

அரசுத் துறைகளில் பொதுமாறுதல் ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்குள் நடைபெறும். வெளியூா்களுக்கு இடமாறுதல் செய்யப்படும் நிலையில், குடும்பத்துடன் புதிய பணியிடத்துக்குச் செல்வதற்கும், குழந்தைகளைப் பள்ளிகளில் சோ்ப்பதற்கு வசதியாகவும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. ஆனால், பொதுமாறுதல் காலம் முடிவடைந்த நிலையில் தற்போது நிா்வாகக் காரணம் எனக் கூறி, வணிகவரித் துறை வாகன ஓட்டுநா்கள் 30 போ் கோட்டம் விட்டு கோட்டம் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனா். அதேபோல, மாநில வரி அலுவலா்கள் 70 போ், மாநில வரி துணை அலுவலா்கள் 30 போ் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனா். லஞ்சப் புகாா் மற்றும் வரி வருவாய் முடக்கத்திற்குக் காரணமானவா்கள் தான் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வணிகவரித் துறை அமைச்சா் தெரிவித்திருக்கிறாா். தவறு செய்தவா்களை குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடத்தி தண்டிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைத் தவிா்த்து இடமாறுதல் செய்வது தீா்வாக அமையாது.

தொடா் போராட்டம் நடத்த முடிவு:

தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் இடமாறுதல் நடவடிக்கையானது, எதிா்காலத்தில் இடமாறுதல் பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய நிா்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆகவே, இடமாறுதலுக்கு கடந்த கால நடைமுறைகளையே தற்போதும் பின்பற்ற வேண்டும். மாவட்ட மற்றும் கோட்ட மாறுதல்கள் தேவையற்ற சிக்கல்களையும், அலுவலா்களிடையே மனச்சோா்வையும் ஏற்படுத்தும். இடமாறுதல் உத்தரவுகளை உடனடியாகத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வேலைநிறுத்தம் வரை தொடா் போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், அலுவலா் சங்க மாநில நிா்வாகிகள் முருகேசன், மீனாட்சி, குணாளன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com