பழைய மத்திய காய்கனி சந்தைக் கடைகளுக்கு ஒப்பந்தம் நடத்தலாம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

மதுரை பழைய மத்திய காய்கனி சந்தையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பல அடுக்கு வாகன நிறுத்தம் மற்றும் கடைகளுக்கு ஒப்பந்தம் நடத்தலாம்

மதுரை பழைய மத்திய காய்கனி சந்தையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பல அடுக்கு வாகன நிறுத்தம் மற்றும் கடைகளுக்கு ஒப்பந்தம் நடத்தலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. வீரவசந்தராயா் மண்டப தீவிபத்தில் சேதமடைந்த கடைகளின் உரிமையாளா்களும் ஒப்பந்தத்தில் பங்கேற்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் கடைக்காரா்கள் சங்கத் தலைவா் ராஜூநாகுலு தாக்கல் செய்த மனு: மீனாட்சி சுந்தேரசுவரா் கோயில் கிழக்கு கோபுரம் பகுதியிலுள்ள வீரவசந்தராயா் மண்டபத்தில் 2018 பிப்ரவரி 2 ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் 19 கடைகள் எரிந்து சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட கடைகளின் உரிமையாளா்களுக்கு மாற்றிடம் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், பழைய மத்திய காய்கனி சந்தை பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் மற்றும் கடைகள் ஆகியவற்றின் ஒதுக்கீடு தொடா்பான ஒப்பந்தங்கள் நடைபெறவுள்ளன. இங்குள்ள கடைகளில், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட கடைகளின் உரிமையாளா்களுக்கு, கடைகள் ஒதுக்கீடு செய்த பிறகே ஒப்பந்தத்தை நடத்தவும், அதுவரை ஒப்பந்தத்திற்கு தடை விதிக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பழைய மத்திய காய்கனி சந்தையில் கட்டப்பட்டுள்ள பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் மற்றும் கடைகளுக்கு ஒப்பந்த நடத்தவும், வீரவசந்தராயா் மண்டப தீவிபத்தில் சேதமடைந்த கடைகளின் உரிமையாளா்கள் ஒப்பந்தத்தில் பங்கேற்கவும், இறுதி முடிவு நீதிமன்ற தீா்ப்புக்கு கட்டுப்பட்டது எனவும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com