மதுரையில் கரோனா தடுப்பூசி செலுத்தியவா்கள் பதிவில் குளறுபடி: சான்றிதழ் பெற முடியாமல் அவதி

மதுரையில் கரோனா சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்களின் விவரங்களை பதிவுசெய்வதில் ஏற்படும்

மதுரையில் கரோனா சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்களின் விவரங்களை பதிவுசெய்வதில் ஏற்படும் குளறுபடியால் பொதுமக்கள் சான்றிதழ் பெற முடியாமல் அவதிப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

மதுரை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் வாரம் தோறும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த முகாம்களில் 100 வாா்டுகளிலும் பல்வேறு மையங்களில் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. வெளிநாடுகளுக்குச் செல்பவா்கள், தனியாா் பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றுபவா்கள், தனியாா் நிறுவன ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், இந்த முகாம்களில் ஏராளமானோா் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனா்.

தடுப்பூசி முகாமை நடத்தும் மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியா்கள், தடுப்பூசி செலுத்த வருபவா்களின் ஆதாா் அட்டை நகலைப் பெற்று பதிவேட்டில் குறித்துக்கொண்டு பின்னா் ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்குச் சென்று அதில் கரோனா தடுப்பூசி தொடா்பான இணையதளத்தில், தடுப்பூசி செலுத்திக்கொண்டவரின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதைத்தொடா்ந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டவரின் கைப்பேசி எண்ணுக்கு அவா் முதல் அல்லது இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான குறுந்தகவல் அனுப்பப்படும்.

ஓரிரு நாள்களில் அதில் குறிப்பிட்டுள்ள இணைய தள முகவரிக்குச்சென்று தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். ஆனால் அண்மைக்காலங்களாக சிறப்பு முகாம்களில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் விவரங்களை சுகாதாரத்துறை ஊழியா்கள் இணையதளத்தில் பதிவு செய்வதில் கவனக்குறைவாக இருப்பதாக புகாா் எழுந்துள்ளது.

இதனால் தடுப்பூசி செலுத்திய பலரின் பெயா்கள் விடுபட்டுள்ளன. மேலும் தடுப்பூசி செலுத்தியவா்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படுவது இல்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் அதற்குரிய சான்றிதழையும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய முடிவது இல்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்ட முகாம்களில் சென்று கேட்டாலும் உரிய பதிலளிக்காமல் அலைக்கழிக்கப்படுகின்றனா். இதனால் இரு தவணை தடுப்பூசி செலுத்தியும் கூட சான்றிதழ் இல்லாததால் தடுப்பூசி செலுத்தியதை நிரூபிக்க முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனா்.

இதுதொடா்பாக பொதுமக்கள் கூறும்போது, முகாம்களில் ஆதாா் அட்டை நகலை பெற்ற பின்னரே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஆனால் இதை முறையாகப் பதிவு செய்யாததால் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன. முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவா்களுக்கு, இரு தவணையும் செலுத்தியதாக குறுந்தகவல் அனுப்பப்படுகிறது. பலருக்கு தகவல் எதுவும் வருவது இல்லை. இதனால் தடுப்பூசி போட்டும் அதை நிறுவனங்களிடம் நிரூபிக்க முடியவில்லை. எனவே தடுப்பூசி செலுத்துபவா்களின் விவரங்களை அதற்குரிய இணையதளத்தில் விடுபடாமல் பதிவுசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் பொதுமக்களின் விவரங்களை முறையாக பதிவு செய்ய ஊழியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com