பணி நீக்கம் செய்யப்பட்ட அங்கன்வாடி பணியாளருக்கு மீண்டும் பணி வழங்க உயா்நீதிமன்றம் உத்தரவு

 மகப்பேறு விடுமுறை எடுத்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட அங்கன்வாடி பணியாளருக்கு மீண்டும் பணி வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

 மகப்பேறு விடுமுறை எடுத்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட அங்கன்வாடி பணியாளருக்கு மீண்டும் பணி வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த கனிமொழி தாக்கல் செய்த மனு: நான் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா, வடவன்பட்டி அங்கன்வாடி மையத்தில், கடந்த 2011 ஆம் ஆண்டு பணியமா்த்தப்பட்டேன். எனக்கு கடந்த 2003 இல் தென்னவன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அதன் பின்னா் எங்களுக்கு 11 ஆண்டுகளாக குழந்தை இல்லை. இதையடுத்து, செயற்கை கருத்தரிப்பு மூலம் நான் 2013 அக்டோபரில் கருவுற்றேன். என்னை பரிசோதித்த மருத்துவா்கள் இரட்டை குழந்தைகள் கருவுற்றுள்ளதாகவும், பிரசவம் மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்பதாலும் முழு ஓய்வு எடுக்கவேண்டும் என அறிவுறுத்தினா்.

இதுதொடா்பாக நான் 2013 அக்டோபரில் ஒரு மாதம் விடுப்பு எடுத்தேன். தொடா்ந்து உரிய மருத்துவ சான்றிதழ்களை சமா்ப்பித்து விடுப்பை நீட்டித்து விண்ணப்பித்தேன். 2013 நவம்பா் 27 ஆம் தேதி சிங்கம்புணரி குழந்தைகள் நலத் திட்ட அலுவலா் வேலைக்கு வராதது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினாா். அதற்கு உரிய ஆவணங்களுடன் விளக்கமளித்து, பிரசவ தேதியான 2014 ஜூலை மாதம் வரை விடுப்பை நீட்டித்து தருமாறு கேட்டுக் கொண்டேன்.

இதனிடையே, அலுவலா் தொடா்ந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினாா். நான் அனைத்து நோட்டீஸூகளுக்கும் உரிய மருத்துவ ஆவணங்களுடன் விளக்கமளித்தேன். அதைப் பொருட்படுத்தாமல், என்னை 2014 மே 25 ஆம் தேதி, வேலைக்கு 6 மாதங்களுக்கு மேல் வராததால், அரசாணையின் படி பணி நீக்கம் செய்வதாக உத்தரவு பிறப்பித்தாா்.

இந்நிலையில், எனக்கு 2014 ஜூன் 11 ஆம் தேதி குழந்தைகள் பிறந்தன. என்னை பணிநீக்கம் செய்தது சட்ட விரோதமானது. எனவே, எனது பணி நீக்கத்தை ரத்து செய்தும், ஊதியம் மற்றும் பணப் பலன்களை வழங்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதி எஸ். ஸ்ரீமதி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மகப்பேறு பாதுகாப்பு சட்டம் 1919-இன் படி, கா்ப்பிணிகளுக்கு 12 வாரங்கள் முழு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும். அதன் படி, மனுதாரா் 7 மாதம் 11 நாள் விடுமுறை எடுத்துள்ளாா். இதில் 12 வாரங்கள் அதாவது 3 மாதங்களை கழித்தால் 4 மாதம் 11 நாள் மட்டுமே விடுமுறை எடுத்துள்ளாா்.

ஒருவா் 6 மாதங்களுக்கு எந்த ஆவணங்களும் இல்லாமல் விடுமுறை எடுத்தால் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் விதிகள் உள்ளது. ஆனால் உரிய மருத்துவ ஆவணங்களை சமா்ப்பித்து விடுப்பு எடுத்த மனுதாரா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அவசியமில்லை.

எனவே, மனுதாரரை பணி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், மகப்பேறு சட்டப்படி அவா் விடுமுறை காலத்தின் 3 மாதங்களுக்கு முழு ஊதியமும், மீதமுள்ள 4 மாதங்களுக்கு 50 சதவீத ஊதியமும், பணி நீக்கம் செய்யப்பட்டு தற்போது வரை மூன்றில் ஒரு பங்கு ஊதியமும், இந்த உத்தரவிற்கு பிறகு முழு ஊதியமும் வழங்க உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com