பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியாக தேயிலை, பீடி தயாரிப்பு: ஒருவா் கைது
By DIN | Published On : 12th October 2021 11:32 PM | Last Updated : 12th October 2021 11:32 PM | அ+அ அ- |

மதுரையில் போலீஸாரால் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட போலி பீடி பண்டல்கள் மற்றும் தேயிலைத்தூள்.
மதுரையில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி தேயிலை, பீடிகள் தயாரித்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து 4 மூட்டைகள் தேயிலை, பீடிகளை பறிமுதல் செய்தனா்.
மதுரையில் போலியாக தேயிலைத்தூள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் பீடிகளை தயாரித்து புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயரில் லேபிள்களையும் அச்சிட்டு ஒட்டி விற்பனை செய்யப்படுவதாக செல்லூா் காவல்நிலையத்தில் தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தினா்.
இதில் மதுரை அருள்தாஸ்புரம் பா்மாகாலனியில் உள்ள வீட்டில் போலி தேயிலை மற்றும் பீடிகள் தயாரிக்கப்படுவது தெரியவந்தது. மேலும் பிரபல நிறுவனங்களின் பெயா்களில் தேயிலை பாக்கெட்டுகள் மற்றும் பீடி பண்டல்களும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், 4 மூட்டைகளில் இருந்த தேயிலை மற்றும் பீடி பண்டல்களை பறிமுதல் செய்து, அவைகளைத் தயாரித்து விற்பனை செய்த முத்துச்செல்வத்தை கைது செய்தனா்.