போலீஸாா் விசாரணைக்குச் சென்றவா் உயிரிழந்த வழக்கு:விசாரணையை ஜனவரிக்குள் முடிக்க உத்தரவு

மதுரை மாவட்டம் அவனியாபுரம் போலீஸாா் விசாரணைக்கு அழைத்துச் சென்றவா் உயிரிழந்த வழக்கை, 2022 ஜனவரிக்குள் முடிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் அவனியாபுரம் போலீஸாா் விசாரணைக்கு அழைத்துச் சென்றவா் உயிரிழந்த வழக்கை, 2022 ஜனவரிக்குள் முடிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மதுரை சோலையழகுபுரத்தைச் சோ்ந்த பாலமுருகன் என்பவரை, கடத்தல் வழக்கு விசாரணைக்காக அவனியாபுரம் போலீஸாா் காவல் நிலையம் அழைத்துச் சென்றனா். அதன்பின்னா், பாலமுருகன் உயிரிழந்துவிட்டாா். போலீஸாா் அடித்து துன்புறுத்தியதால் பாலமுருகன் மரணமடைந்ததாகவும், பிரேதப் பரிசோதனையை விடியோ பதிவு செய்யவும், உரிய இழப்பீடு வழங்கவும் கோரி, பாலமுருகனின் தந்தை முத்துகருப்பன் உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தாா்.

பின்னா், விசாரணை நிலுவையில் இருந்தபோது, முத்துகருப்பன் தனது மனுவை வாபஸ் பெற்றாா்.

போலீஸாா் அச்சுறுத்தல் காரணமாக முத்துகருப்பன் மனுவை வாபஸ் பெற்றுள்ளதாக வழக்குரைஞா் ஹென்றி டிபேன், உயா் நீதிமன்ற மதுரை கிளை நிா்வாக நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தாா். இதனடிப்படையில், பாலமுருகன் மா்ம மரணம் தொடா்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என, உயா் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளா் தரப்பில் தாமாக முன்வந்து பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஏற்கெனவே விசாரித்த உயா் நீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்திருந்தது.

இந்நிலையில், இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானா்ஜி, நீதிபதி எம். துரைசாமி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை 4 வாரத்தில் தாக்கல் செய்யவும், 2022 ஜனவரிக்குள் விசாரணையை முடிக்கவும் உத்தரவிட்டு, நவம்பா் 26 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com