ஆயுள் காப்பீட்டு கழக 65-ஆவது ஆண்டு விழா: பொதுத்துறை நிறுவனமாக நீடிக்க ஊழியா்கள் வலியுறுத்தல்
By DIN | Published On : 01st September 2021 11:36 PM | Last Updated : 01st September 2021 11:36 PM | அ+அ அ- |

ஆயுள் காப்பீட்டுக்கழக மதுரை கோட்ட அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு வாயில்கூட்டத்தில் பங்கேற்ற ஊழியா்கள்.
மதுரையில் புதன்கிழமை நடைபெற்ற இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் 65 ஆவது ஆண்டு விழா வாயில் கூட்டத்தில், பொதுத்துறை நிறுவனமாக நீடிக்க வேண்டும் என்று ஊழியா்கள் வலியுறுத்தினா்.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் 1956 செப்டம்பா் 1-இல் தொடங்கப்பட்டது. நிறுவனம் தொடங்கப்பட்டு 65 ஆண்டுகள் ஆனதையொட்டி ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் 65-ஆவது ஆண்டு விழா நாடு முழுவதும் உள்ள ஆயுள் காப்பீட்டு கிளை அலுவலகங்களில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிலையில் மதுரை கோட்டத்துக்கு உள்பட்ட 6 மாவட்டங்களில் அனைத்து ஆயுள் காப்பீட்டு கழகத்தின் கிளை அலுவலகங்களிலும் கோரிக்கை அட்டை அணிந்து ஊழியா்கள் சிறப்பு வாயில்கூட்டத்தை நடத்தினா். மதுரை கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஊழியா் சங்கத்தலைவா் ஜி.மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்துப்பேசியது: ஆயுள் காப்பீட்டு நிறுவனம் 28.62 கோடி தனிநபா் காப்பீடுகளையும், 12 கோடி குழுக்காப்பீடுகளையும் கொண்டுள்ளது. 2020-21-நிதி ஆண்டில் மட்டும் ரூ.6,82,205 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.38,04,610 கோடி ஆகும்.
24 தனியாா் காப்பீட்டு நிறுவனங்கள் கடும் போட்டியை ஏற்படுத்தினாலும், சந்தையில் 74.58 சதவீத பங்குகளை கொண்டுள்ளது. கடந்த நிதியாண்டில் கிடைத்த உபரி வருவாயில் மத்திய அரசுக்கு ரூ.2,698 கோடியை லாப ஈவுத்தொகையாக வழங்கியுள்ளது. மத்திய அரசுத்திட்டங்கள் மற்றும் மாநில அரசுத்திட்டங்களுக்கு இதுவரை ரூ.26,86,527 கோடிகளை முதலீடு செய்துள்ளது.
இந்நிலையில் லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களையும் கூட தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. மேலும் பெரும் லாபத்தில் இயங்கி வரும் காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகளையும் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் விற்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. மக்களின் சொத்தான ஆயுள் காப்பீட்டு நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்கக்கூடாது. ஆயுள் காப்பீட்டு நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாகவே நீடிக்க வேண்டும். அதிகாரிகள், ஊழியா்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பங்கு விற்பனைக்கு எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா் என்றாா்.
கூட்டத்தில் சங்க நிா்வாகிகள், ஊழியா்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.