சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: பென்னிக்ஸ் நண்பா் 5 மணி நேரம் சாட்சியம்
By DIN | Published On : 04th September 2021 10:46 PM | Last Updated : 04th September 2021 10:46 PM | அ+அ அ- |

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், மகன் பென்னிக்ஸின் நண்பா் சங்கரலிங்கம் மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் சனிக்கிழமை 5 மணி நேரம் சாட்சியம் அளித்தாா்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 2020 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி வணிகா் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோா் கரோனா விதிமுறைகளை மீறி கடையை திறந்திருந்ததாக கைது செய்யப்பட்டனா். பின்னா் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனா். இவா்கள் இருவரும் போலீஸாா் தாக்கியதில் உயிரிழந்ததாக சா்ச்சை எழுந்ததைத் தொடா்ந்து, உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து இந்த வழக்கை எடுத்து நடத்தியது.
இதைத் தொடா்ந்து காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் உள்பட 10 போலீஸாா் மீது சிபிசிஐடி போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து, அவா்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னா் வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதில் சாா்பு- ஆய்வாளா் பால்துரை கரோனாவால் இறந்ததையடுத்து, மற்ற 9 போ் மீதும் 2020 செப்டம்பரில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு நீதிபதி வி.பத்மநாபன் முன் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வணிகா் பென்னிக்ஸின் நண்பா் சங்கரலிங்கம், நீதிமன்றத்தில் ஆஜராகி, சம்பவம் தொடா்பாக 5 மணி நேரம் சாட்சியம் அளித்தாா். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை செப்டம்பா் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.