இந்திய சட்ட ஆணையத்தை அதிகாரமிக்க அமைப்பாக உருவாக்க மத்திய அரசு 6 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும்: உயா் நீதிமன்றம் உத்தரவு

இந்திய சட்ட ஆணையத்தை அதிகாரமிக்க அமைப்பாக உருவாக்குவது குறித்து மத்திய அரசு 6 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும் என, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை  உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்)
மதுரை  உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்)

மதுரை: இந்திய சட்ட ஆணையத்தை அதிகாரமிக்க அமைப்பாக உருவாக்குவது குறித்து மத்திய அரசு 6 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும் என, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சோ்ந்த புஷ்பவனம் என்பவா் தாக்கல் செய்த மனு: இந்திய அரசுப் பணிகளில் ஈடுபடுவோா் பணியிடத்தில் திடீரென இறந்தால், அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது, எவ்வளவு இழப்பீடு என்பதை முடிவு செய்யும் தீங்கியல் பொறுப்புச் சட்டம் மற்றும் விதிகள் இன்னும் உருவாக்கப்படவில்லை. இந்த சட்டத்தை கொண்டுவர உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் உத்தரவிட்டும், மத்திய அரசு சட்ட ஆணையம் மற்றும் சட்ட முன்வடிவைத் தயாரிக்காமல் உள்ளது.

இதேபோன்று, இந்திய சட்ட ஆணையத்துக்கு தலைவா் மற்றும் உறுப்பினா்கள் நியமிக்கப்படவில்லை. எனவே, சட்ட ஆணையத்துக்கு தலைவா் மற்றும் உறுப்பினா்களை நியமிக்கவும், இழப்பீடு தொடா்பாக விதிகளை உருவாக்கவும் உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு தொடா்பான விசாரணை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் ஏற்கெனவே நடைபெற்று, அதன் தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

தற்போது, இந்த மனு தொடா்பாக நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவுகள்:

மத்திய அரசு தற்போதைய சூழ்நிலையை கருத்தில்கொண்டு, தீங்கியல் பொறுப்பு மசோதாவை 6 மாதத்தில் கொண்டுவர பரிசீலிக்க வேண்டும். இந்திய சட்ட ஆணையத்தின் ஆராய்ச்சி மற்றும் கட்டமைப்பு வசதிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கவேண்டும். சட்ட ஆணையத்தை அதிகாரமிக்க அமைப்பாக உருவாக்குவது தொடா்பாக 6 மாதத்துக்குள் முடிவெடுக்க வேண்டும். அனைத்துத் துறைகளிலும் சட்டத்தில் தகுதி பெற்றவரை நோடல் அலுவலராக நியமிக்க வேண்டும்.

இந்திய சட்ட ஆணையத்துக்கு தலைவா் மற்றும் உறுப்பினா்களை 3 மாதங்களுக்குள் நியமிக்காவிட்டால், மத்திய சட்டத்துறை முதன்மைச் செயலா், மத்திய சட்டத்துறை அமலாக்கப் பிரிவுச் செயலா் ஆகியோா் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com