மதுரையில் குழந்தைகள் விற்பனை வழக்கு: காப்பக ஒருங்கிணைப்பாளருக்கு நிபந்தனை ஜாமீன்
By DIN | Published On : 07th September 2021 12:56 AM | Last Updated : 07th September 2021 12:56 AM | அ+அ அ- |

மதுரை: மதுரையில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில், காப்பக ஒருங்கிணைப்பாளருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரை ரிசா்வ் லைன் பகுதியில் இதயம் முதியோா் மற்றும் ஆதரவற்றோா் காப்பகம் செயல்பட்டு வந்தது . இந்த காப்பகத்திலிருந்த 2 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டதாகப் புகாா் எழுந்தது. இது தொடா்பாக, தல்லாகுளம் போலீஸாா் விசாரணை நடத்தி, 2 குழந்தைகளையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.
இந்த வழக்கில், காப்பகத்தின் இயக்குநா் சிவகுமாா், இவரது உதவியாளா் மதா்ஷா, ஒருங்கிணைப்பாளா் கலைவாணி, இடைத்தரகா்கள் ராஜா, செல்வி உள்ளிட்ட பலரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், இடைத்தரகா்கள் செல்வி மற்றும் ராஜா ஆகியோருக்கு செப்டம்பா் 3 ஆம் தேதி ஜாமீன் வழங்கி, உயா்நீதிமன்ற மதுரை கிளையில் உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காப்பக ஒருங்கிணைப்பாளா் கலைவாணி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி பி. புகழேந்தி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வழக்கு தொடா்பாக காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கலைவாணிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.