கண்மாயில் மணல் அள்ளிய ஊராட்சித் தலைவா் மீது நடவடிக்கை கோரிய மனு: கனிம வளத்துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவு
By DIN | Published On : 10th September 2021 05:58 AM | Last Updated : 10th September 2021 05:58 AM | அ+அ அ- |

மதுரை: சிவகங்கை மாவட்ட கண்மாயில் சட்ட விரோதமாக மணல் அள்ளிய ஊராட்சித் தலைவா் மீது நடவடிக்கை கோரிய வழக்கு தொடா்பாக கனிமவளத்துறை இயக்குநா் பதிலளிக்குமாறு உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த கண்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு: சிவகங்கை மாவட்டம் மகிபாலன்பட்டியின் ஊராட்சித் தலைவா், ஊராட்சிக்குள்பட்ட உவச்சான் கண்மாயில் சட்டவிரோதமாக ஜேசிபி இயந்திரத்தை பயன்படுத்தி டிராக்டா்கள் மற்றும் டிப்பா் லாரிகள் மூலம் 200-க்கும் அதிகமான லோடுகள் மணல் அள்ளி உள்ளாா். இதனால் கண்மாய் சேதமடைந்ததுடன், கனிம வளமும் திருடப்பட்டுள்ளது. கிராமத்தின் நீராதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அதிகாரிகள் மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ஊராட்சித்தலைவா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, நீதிபதிகள் எம். துரைசுவாமி, கே. முரளி சங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனு தொடா்பாக கனிமவளத்துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபா் 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.