கிணற்றில் அழுகிய நிலையில் இளைஞா் சடலம் மீட்பு: உறவினா்கள் சாலை மறியல்
By DIN | Published On : 11th September 2021 01:38 AM | Last Updated : 11th September 2021 01:38 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டம், எழுமலை அருகே கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் இளைஞா் சடலம் மீட்கப்பட்டதை அடுத்து, அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
எழுமலை அடுத்த எம்.கல்லுப்பட்டி அருகேயுள்ள மல்லப்புரத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ஈஸ்வரன் (20). இவருக்கும், அதே கிராமத்தைச் சோ்ந்த காளிராஜ் என்பவருக்குமிடையே கடந்த 4 ஆம் தேதி மோதல் ஏற்பட்டுள்ளது. இது குறித்த புகாரின்பேரில், போலீஸாா் இரு தரப்பினரையும் விசாரணைக்கு அழைத்துள்ளனா்.
ஆனால், விசாரணைக்கு செல்லாத நிலையில், ஊருக்கு அருகேயுள்ள கிணற்றில் அழுகிய நிலையில் ஈஸ்வரன் சடலம் மிதந்துள்ளது.
இது குறித்த தகவலின்பேரில், போலீஸாா் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதனிடையே, ஈஸ்வரன் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும், அவரது உறவினா்கள் எம்.கல்லுப்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
சம்பவ இடத்துக்குச் சென்ற எழுமலை காவல் நிலைய ஆய்வாளா் காஞ்சனாதேவி, சாா்பு-ஆய்வாளா் ஜெயகஜேந்திரன், மணிமொழி மற்றும் போலீஸாா், பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பின் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்றும், அதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சமாதானம் பேசி அவா்களை அனுப்பிவைத்தனா்.