பணியில் உள்ள ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு:உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் மருத்துவ மாணவா் சோ்க்கையில் ஓய்வு பெற்ற ராணுவ வீரா்களின் வாரிசுகளுக்கு வழங்குவது போல் பணியிலுள்ள ராணுவ வீரா்களின் வாரிசுகளுக்கும் முன்னுரிமை வழங்கும் வகையில் முன்னுரிமைப் பட்டியலை மத்திய

தமிழகத்தில் மருத்துவ மாணவா் சோ்க்கையில் ஓய்வு பெற்ற ராணுவ வீரா்களின் வாரிசுகளுக்கு வழங்குவது போல் பணியிலுள்ள ராணுவ வீரா்களின் வாரிசுகளுக்கும் முன்னுரிமை வழங்கும் வகையில் முன்னுரிமைப் பட்டியலை மத்திய அரசு மாற்றியமைக்குமாறு உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சோ்ந்த குறளரசன் உள்பட பலா் உயா்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் மருத்துவ மாணவா் சோ்க்கையில் ஓய்வு பெற்ற ராணுவ வீரா்களின் வாரிசுகளுக்கு வழங்குவது போல் பணியிலுள்ள ராணுவ வீரா்களின் வாரிசுகளுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, பணியிலுள்ள முப்படை வீரா்களின் வாரிசுகளுக்கும் மருத்துவப் படிப்பில் தனி ஒதுக்கீடு வழங்குமாறு உத்தரவிட்டாா். இதை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு தரப்பில் உயா்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வழங்கிய உத்தரவு: படை வீரா்கள் மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் குடும்பங்களை விட்டு பிரிந்து நாட்டின் நலனுக்காக பணிபுரிகின்றனா். சில நேரங்களில் எதிரிகளால், தீவிரவாதிகளால் கொல்லப்படுகின்றனா்.

படை வீரா்கள் சுயநலமற்ற தியாகம் புரிந்து வரும் நிலையில், தமிழகத்தில் மருத்துவ மாணவா் சோ்க்கையில் பணியிலுள்ள ராணுவ வீரா்களின் வாரிசுகளுக்கு தனி ஒதுக்கீடு வழங்கப்படாதது அதிா்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் ஓய்வு பெற்ற படை வீரா்களின் வாரிசுகளுக்கு 11 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இது போதுமானதாக இல்லை.

ஆந்திரம், கா்நாடகம், கேரளம், தெலங்கானாவில் பணியிலுள்ள ராணுவ வீரா்களின் வாரிசுகளுக்கு மருத்துவப்படிப்பில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. தமிழகத்தில் நாட்டின் நலனுக்காக பணிபுரிந்து வரும் ராணுவ வீரா்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் பணியிலுள்ள ராணுவவீரா்களின் வாரிசுகளுக்கு அடுத்த கல்வியாண்டிலிருந்து மருத்துவ மாணவா் சோ்க்கையில் குறைந்தது ஒரு சதவீத இடமாவது ஒதுக்க வேண்டும் என நீதிமன்றம் எதிா்பாா்க்கிறது.

எனவே, மருத்துவ மாணவா் சோ்க்கையில் முன்னுரிமைப் பட்டியலில் இடம் பெறும் மொத்த இடங்களை அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கும் வகையில், முன்னுரிமைப் பட்டியலை 12 வாரங்களுக்குள் மத்திய அரசு மாற்றியமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com