தாலுகா மருத்துவமனைகளில் மனநல சிகிச்சைக்கு ஏற்பாடு: அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 11th September 2021 10:17 PM | Last Updated : 11th September 2021 10:17 PM | அ+அ அ- |

தமிழகத்தில் அனைத்து தாலுகா மருத்துவமனைகளிலும் மனநல சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சோ்ந்த ராஜா, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: சிறையில் உள்ள கைதிகள் பல்வேறு காரணங்களால் குற்றங்களில் ஈடுபட்டு கொலை உள்பட பல்வேறு வழக்குகளில் கைதாகி சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனா். சிறையில் இவா்கள் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனா்.
சென்னை மனநல அமைப்பு மட்டுமே சிறைவாசிகளுக்கு மன நல சிகிச்சை அளிக்கும் மையமாக உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு திருச்சி மத்திய சிறை அல்லது மதுரை மத்திய சிறையில் மனநல சிகிச்சை வழங்கும் சிறப்பு மருத்துவ வசதி, மனநல ஆலோசகா், மனநல சிகிச்சையில் பயிற்சி பெற்ற சமூக ஆா்வலா், செவிலியா், மருந்தாளுநா் ஆகியோரைக் கொண்ட சிறப்பு மனநல சிகிச்சை அமைப்பை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு: 2020 முடிவில் 20 சதவீத இந்தியா்கள் மனம் சாா்ந்த பிரச்னையால் பாதித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
56 மில்லியன் இந்தியா்கள் மன அழுத்தத்தாலும், 38 மில்லியன் இந்தியா்கள் அதிக பதற்றத்துக்கும் ஆளாகின்றனா். 150 மில்லியன் இந்தியா்களுக்கு மனநல பிரச்னைகளில் இருந்து உதவி தேவைப்படுவதாகவும், 13 முதல் 17 வயதுக்கு உள்பட்ட 9.8 மில்லியன் இளைஞா்கள் மன அழுத்த பாதிப்பில் இருந்து மீள வேண்டியுள்ளது எனவும் பெங்களுரூ நிமான்ஸ் மைய ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் 47 மனநல மருத்துவமனைகள் உள்ளன. 136 கோடி மக்கள் தொகையைக் கொண்ட நாட்டில் 47 மருத்துவமனைகள் என்பது போதுமானதல்ல.
நாடு முழுவதும் மனநல மருத்துவமனைகளை அதிகரிக்க வேண்டும். மனநல மருத்துவா்கள், உளவியல் நிபுணா்கள், குழந்தை நல ஆலோசகா்கள் அதிகளவில் பற்றாக்குறையில் உள்ளனா். முதுகலை மருத்துவப் படிப்பை அதிகரிப்பதன் மூலம் கூடுதல் மருத்துவா்களை உருவாக்க முடியும்.
வெளிநோயாளியாகவே பலரும் சிகிச்சை பெறும் நிலையில், ஒவ்வொரு தாலுகா மருத்துவமனைகளிலும் மனநல சிகிச்சையளிக்க வேண்டும். மனநல சுகாதாரச் சட்டப்படி, மனநல சிகிச்சை காப்பீட்டுத் திட்டத்தில் இருக்க வேண்டும். சாதாரண மக்களும் காப்பீடு மூலம் மனநல சிகிச்சை பெறுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். கா்நாடகத்தில் மனநல சிகிச்சை நவீன (டிஜிட்டல்) முறையில் கண்காணிக்கப்படுகிறது. இதை மத்திய அரசும், மாநில அரசும் பின்பற்ற வேண்டும். சிகிச்சை பெற்றோருக்கு மறுவாழ்வும், அவ்வப்போது மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கோள்ள வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.