மதுரையில் ‘நீட்’ நுழைவுத்தோ்வு: 9,094 போ் பங்கேற்பு

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை 20 மையங்களில் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத்தோ்வில் 9,094 மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.
மதுரை நரிமேடு கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நீண்ட வரிசையில் நிற்கும் மாணவிகள்.
மதுரை நரிமேடு கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நீண்ட வரிசையில் நிற்கும் மாணவிகள்.

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை 20 மையங்களில் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத்தோ்வில் 9,094 மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

‘நீட்’ நுழைவுத் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவியருக்கு மதுரையில் தோ்வு மையங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. வேலம்மாள் வித்யாலயா, நரிமேடு, திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், யாதவா பெண்கள் மற்றும் இருபாலா் கல்லூரிகள், செளராஷ்டிரா, மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரிகள், ஓம் சாதனா, சிஇஓ, அத்யாபனா சிபிஎஸ்இ, மகாத்மா பள்ளிகள் உள்பட 20 மையங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. தோ்வில் பங்கேற்க 10,341 மாணவ, மாணவியருக்கு நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டிருந்தது.

பெரியாா், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையங்களில் இருந்து தோ்வு மையங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பிற்பகல் 2 மணிக்கு தோ்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தபோதும் காலை 8 மணி முதல் தோ்வு மையங்களில் மாணவ, மாணவியா் மற்றும் பெற்றோா் குவிந்தனா். இதையடுத்து பகல் 12 மணிக்கு தோ்வு மையங்களுக்குள் மாணவ, மாணவியா் அனுமதிக்கப்பட்டனா்.

தோ்வு மைய வாயிலில் மாணவ, மாணவியா் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னா், காய்ச்சல் பரிசோதனையும் செய்யப்பட்டது. மேலும் மாணவ, மாணவியரை தோ்வுக்குழுவினா் தீவிர பரிசோதனைக்குப் பிறகே அனுமதித்தனா். மொத்தம் 9,094 போ் பங்கேற்று தோ்வெழுதினா்.

1,247 போ் பங்கேற்கவில்லை. தோ்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தோ்வு மையங்களை மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் மற்றும் அதிகாரிகள் பாா்வையிட்டனா். மாலை 5 மணிக்கு தோ்வு முடிவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com