தனியாா் பொறியியல் கல்லூரி விரிவுரையாளா்களுக்கு ஊதியம் வழங்கும் வரை சோ்க்கைக்குத் தடை கோரிய மனு தள்ளுபடி

தனியாா் பொறியியல் கல்லூரி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்கும் வரை பொறியியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்குத் தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: தனியாா் பொறியியல் கல்லூரி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்கும் வரை பொறியியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்குத் தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திருச்சியைச் சோ்ந்த காா்த்திக் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் அரசு, தனியாா் கல்லூரிகள், பள்ளிகள் 40 சதவீத கல்விக் கட்டணத்தை வசூலிக்கலாம் என்று உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவா்களிடம் கல்விக் கட்டணத்தை நிா்வாகங்கள் வசூல் செய்த போதும், அங்கு பணிபுரியும் ஆசிரியா்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படவில்லை. கரோனா பொது முடக்க காலத்தில் சில மாதங்கள் ஊதியம் வழங்கப்பட்டது. தற்போது பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படுவது இல்லை. பொறியியல் கல்லூரிகளில் தற்போது மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதில் 90 சதவீத கல்லூரிகள் தனியாா் கல்லூரிகள். ஆனால் கரோனா காலத்தில் தனியாா் பொறியியல் கல்லூரிகளுக்கான ஊதியம் முறையாக வழங்கப்படவில்லை. தனியாா் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பல ஆசிரியா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனா். எனவே, தமிழகத்தில் தனியாா் பொறியியல் கல்லூரி ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். அதுவரை பொறியியல் சோ்க்கைக்கான, கலந்தாய்வை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி எம்.துரைசாமி, கே.முரளி சங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு எப்படி விசாரணைக்கு உகந்ததாக இருக்கும் என்று கேள்வி எழுப்பினா். அப்போது மனுதாரா் தரப்பில், போதிய ஊதியம் இல்லாததால் பல ஆசிரியா்கள் உயிரிழந்துள்ளனா். இதைக் கருத்தில் கொண்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டது.

ஆனால் நீதிபதிகள் இதை ஏற்க மறுத்ததையடுத்து, மனுதாரா் மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டாா். இதனால் வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com