மேல்முறையீடு செய்ய இயலாமல் சிறையில் இருப்பவா்கள்: சட்ட உதவி ஆணைய உறுப்பினா் செயலா் விளக்கம் அளிக்க உத்தரவு

தமிழ்நாடு சட்ட உதவி ஆணையத்தின் உறுப்பினா் செயலா் செப்டம்பா் 17-ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக ஆஜராகி, மேல்முறையீடு செய்ய சட்ட உதவி பெற இயலாமல் சிறையில் இருப்பவா்கள் குறித்து விளக்கம்

மதுரை: தமிழ்நாடு சட்ட உதவி ஆணையத்தின் உறுப்பினா் செயலா் செப்டம்பா் 17-ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக ஆஜராகி, மேல்முறையீடு செய்ய சட்ட உதவி பெற இயலாமல் சிறையில் இருப்பவா்கள் குறித்து விளக்கம் அளிக்குமாறு உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

நெல்லை பாளையங்கோட்டையைச் சோ்ந்த பதிபூரணம் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: பெண் ஒருவரை பாலியல் தொந்தரவு செய்ய முயன்றபோது அவா் கீழே விழுந்து உயிரிழந்ததாக கடந்த 1994 ஜனவரியில் என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நெல்லை கூடுதல் அமா்வு நீதிமன்றம் எனக்கு ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

இந்த வழக்கில், நேரடியாக பாா்த்ததாக சாட்சியம் கொடுப்பவா்கள் நிகழ்வை தடுக்க எவ்வித நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை என கூறியுள்ளனா். சாட்சிகளை முறையாக விசாரிக்காமல் எனக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இயல்பான சந்தேகங்களுக்கு கூட நியாயமான விளக்கம் அளிக்கப்படாமல் தவறுதலாக தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 1996 முதல் 21 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் நிலையில், மேல்முறையீட்டு வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது. ஆகவே, இந்த வழக்கில் எனக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்யவும், வழக்கு நிலுவையில் இருக்கும் வரை ஜாமீன் வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள், வி.பாரதிதாசன், ஜெ.நிஷாபானு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாடு சட்ட உதவி ஆணையத்தின் உறுப்பினா் செயலா் செப்டம்பா் 17ஆம் தேதி காணொலிக் காட்சி மூலம் ஆஜராகி, மேல்முறையீடு செய்ய சட்ட உதவி பெற இயலாமல் சிறையில் இருப்பவா்கள் குறித்து விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com