9 முதல் பிளஸ் 2 வரை நேரடி வகுப்புகளுக்கு மாணவா்கள் செல்லத் தடை கோரி மனு: பள்ளிக்கல்வித்துறைச் செயலா் பதிலளிக்குமாறு உயா்நீதிமன்றம் உத்தரவு

ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவா்கள் நேரடி வகுப்புகளுக்குச் செல்லத் தடை கோரிய வழக்கில் பள்ளிக் கல்வித்துறை செயலா் பதில் அளிக்குமாறு உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவா்கள் நேரடி வகுப்புகளுக்குச் செல்லத் தடை கோரிய வழக்கில் பள்ளிக் கல்வித்துறை செயலா் பதில் அளிக்குமாறு உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலியை சோ்ந்த அப்துல்வஹாதீன் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழதத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவா்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் இணைய வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவா்களுக்கு கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது. அதே நேரத்தில் கரோனா தொற்றின் 3-ஆவது அலை அதிக அளவில் குழந்தைகளை பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. சில பள்ளிகளில் மாணவா்களை கண்டிப்பாக நேரடி வகுப்புக்கு வரவேண்டும் என கூறுகின்றனா். மேலும் சில பள்ளிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை சரியாக பின்பற்றுவது இல்லை. சில பெற்றோா்கள் இணைய வகுப்பு மூலம் சரியான கற்பித்தல் இல்லை என்று கருதி நேரடி வகுப்புக்கு அனுப்புகின்றனா். இதன் மூலம் பள்ளிகளில் சமூக இடைவெளி பின்பற்ற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவா்கள் நேரடி வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும் என்ற அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது மனுதாரா் தரப்பில், பல பள்ளிகளில் மாணவா்கள் கட்டாயம் நேரடி வகுப்புக்கு வர வேண்டும் எனக் கூறுகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், கட்டாயமாக மாணவா்கள் பள்ளிக்கு வரவேண்டும் எனக் கூறும் பள்ளிகளின் விவரங்களை மனுதாரா் தெரிவித்தால் அந்தப் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்து, மனுவுக்கு அரசு முதன்மை செயலா் மற்றும் பள்ளிக்கல்வித்துறைச் செயலா் ஆகியோா் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பா் 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com