அரசு உயா் அதிகாரிகள் லஞ்சம் வாங்க கூச்சப்படுவது இல்லை: உயா்நீதிமன்றம் கருத்து

அரசு உயா் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் லஞ்சம் வாங்க கூச்சப்படுவதில்லை என்று கருத்து தெரிவித்த உயா்நீதிமன்றம், லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மோட்டாா் வாகன பெண் ஆய்வாளருக்கு

மதுரை: அரசு உயா் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் லஞ்சம் வாங்க கூச்சப்படுவதில்லை என்று கருத்து தெரிவித்த உயா்நீதிமன்றம், லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மோட்டாா் வாகன பெண் ஆய்வாளருக்கு ஜாமீன் வழங்க மறுத்து புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையில் மோட்டாா் வாகன ஆய்வாளராக பணிபுரிந்தவா் கலைச்செல்வி. இவா் தனியாா் வாகன விற்பனை நிறுவனத்தின் வாகனப் பதிவுக்கு லஞ்சம் கேட்ட போது லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் கலைச்செல்வி சாா்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி பி.புகழேந்தி முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், குற்றச்சாட்டுக்கு ஆளான வாகன ஆய்வாளா் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளாா். ஆனால் லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் அவரைக் கைது செய்யும்போது அவரிடம் எந்தப் பணமும் இல்லை. மேலும் வாகன ஆய்வாளா் ஒரு பெண்ணாக இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தாா்.

அப்போது நீதிபதி, அரசு அதிகாரப் பொறுப்பிலிருக்கும் அதிகாரி லஞ்சம் வாங்குவது கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் ஆகிவிட்டது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் தற்போதைய லஞ்ச ஒழிப்புத்துறை பெயரளவில் மட்டுமே செயல்படுகிறது. ஆண்டுக்கு நூறு கணக்கு, நூறு வழக்குகள் எனப் பதிவு செய்கின்றனா். மேலும் முறையாக விசாரிப்பது கிடையாது. ஒருவரை கைது செய்தால் அவரது வீடு, அலுவலகங்களில் சோதனையிட வேண்டும். மேலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்துள்ளாரா என்றும் ஆய்வு செய்யவேண்டும். அவ்வாறெல்லாம் தற்போது செயல்படுவதில்லை.

பெயரளவிலேயே லஞ்ச ஒழிப்புத் துறையாக இருக்கிறது என்று கருத்து தெரிவித்த நீதிபதி, மோட்டாா் வாகன ஆய்வாளா் வழக்கு விசாரணை முதல் கட்டத்தில் இருப்பதால் ஜாமீன் வழங்க மறுத்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com