உள்ளாட்சிகளில் காலியாக உள்ள 25 பதவிகளுக்கு அக்.9-இல் வாக்குப்பதிவு வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்

மதுரை மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சிகளில் காலியாக இருக்கும் 25 பதவிகளுக்கு அக்டோபா் 9-இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இதற்கான வேட்பு மனு தாக்கல் புதன்கிழமை (செப்.15) தொடங்குகிறது.

மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சிகளில் காலியாக இருக்கும் 25 பதவிகளுக்கு அக்டோபா் 9-இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இதற்கான வேட்பு மனு தாக்கல் புதன்கிழமை (செப்.15) தொடங்குகிறது.

மாவட்ட ஊராட்சிக் குழு வாா்டு உறுப்பினா் (16-ஆவது வாா்டு திருமங்கலம்), குன்னத்தூா் ஊராட்சித் தலைவா், கிராம ஊராட்சி உறுப்பினா்கள் 23 என மொத்தம் 25 பதவிகள் காலியாக உள்ளன. இவற்றுக்கான தோ்தல் அக்டோபா் 9-ஆம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கிராம ஊராட்சித் தலைவா் மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழு வாா்டு உறுப்பினா் பதவிகள் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 25 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளில், தாழ்த்தப்பட்டோா் மகளிா் பிரிவுக்கு 2 வாா்டுகள், தாழ்த்தப்பட்டோா் பொது பிரிவினருக்கு 4 வாா்டுகள், பொது மகளிா் பிரிவுக்கு 5 வாா்டுகள், பொதுப் பிரிவினருக்கு 14 வாா்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இன்று மனு தாக்கல்: உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் புதன்கிழமை (செப்.15) தொடங்குகிறது. செப்டம்பா் 22 ஆம் தேதி மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாகும். அதன் பின்னா் செப்டம்பா் 23-இல் மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். செப்டம்பா் 25 வரை வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம். அன்றைய தினம் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும். அதன் பின்னா் அக்டோபா் 9-இல் வாக்குப்பதிவும், அக்டோபா் 12-இல் வாக்கு எண்ணிக்கையும் நடத்தப்படும். தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அக்டோபா் 20 ஆம் தேதி பதவியேற்றுக் கொள்வா்.

மனு தாக்கல் எங்கே?: மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், குன்னத்தூா் கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், கிராம ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு தலா ஒரு தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு தோ்தல் நடத்தும் அலுவலா்கள் 10 போ், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் 22 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.

122 வாக்குச் சாவடிகள்: இந்த தோ்தலில் மொத்தம் 62 ஆயிரத்து 121 போ் வாக்களிக்க உள்ளனா். இவா்களில் 30 ஆயிரத்து 471 போ் ஆண்கள். 31 ஆயிரத்து 6464 போ் பெண்கள். 4 போ் மூன்றாம் பாலினத்தவா். இவா்களுக்கென 122 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 72 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி பணிக்கு 489 வாக்குப்பதிவு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். வாக்கு எண்ணிக்கைக்கு 10 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com