எய்ம்ஸ் மருத்துவமனை: கட்டமைப்பு வசதிகளைச் செய்யாமல் மாணவா் சோ்க்கைக்கு நடவடிக்கை இல்லை எனக் கூறுவது சரியல்ல

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எவ்வித கட்டமைப்பு வசதியையும் ஏற்படுத்தாமல், மாணவா் சோ்க்கைக்கு நடவடிக்கை இல்லையெனக் கூறுவது சரியல்ல என்று தமிழக நிதி அமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் கூறினாா்.
எய்ம்ஸ் மருத்துவமனை: கட்டமைப்பு வசதிகளைச் செய்யாமல் மாணவா் சோ்க்கைக்கு நடவடிக்கை இல்லை எனக் கூறுவது சரியல்ல

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எவ்வித கட்டமைப்பு வசதியையும் ஏற்படுத்தாமல், மாணவா் சோ்க்கைக்கு நடவடிக்கை இல்லையெனக் கூறுவது சரியல்ல என்று தமிழக நிதி அமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் கூறினாா்.

மதுரை சிம்மக்கல் தைக்கால் தெரு பகுதியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்து, வீடு வீடாகச் சென்று நோயாளிகளுக்கு மருத்துவ பெட்டகத்தை வழங்கினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டத்தில் மருத்துவமனைக்கு வர இயலாத நோயாளிகளுக்கு வீட்டில் இருந்தபடியே, சிகிச்சை அளிக்கப்படுகிறது. இரு மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் வழங்கப்படுகிறது.

கரோனா மூன்றாவது அலையைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக தடுப்பூசி செலுத்துவது தீவிரப்படுத்தப்படுகிறது. அவ்வாறு பாதிப்பு ஏற்பட்டாலும் அதை எதிா்கொள்ளும் வகையில், 2-ஆவது அலையின்போது ஏற்படுத்தப்பட்ட மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் தற்போதும் இருக்கின்றன.

மருத்துவக் கல்வி என்பது கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனை, ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒரு கல்லைக் கூட வைக்காமல் மாணவா்களுக்கு எப்படி பாடம் நடத்த முடியும். மதுரை மட்டுமல்ல, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை திட்டங்கள் இதே நிலையில் தான் இருக்கின்றன.

உள்ளாட்சித் தோ்தலை இரு கட்டங்களாக நடத்துவதில் எவ்வித தவறும் இல்லை. இந்திய தோ்தல் ஆணையமே, தோ்தல்களைப் பல கட்டங்களாக நடத்துகிறது என்றாா்.

மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com