திமுக எம்எல்ஏ மனைவிக்கு பிடி ஆணை: மதுரை பொருளாதார நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 15th September 2021 11:24 PM | Last Updated : 15th September 2021 11:24 PM | அ+அ அ- |

மதுரை: தனியாா் நிதி நிறுவன மோசடி தொடா்பாக சாட்சியம் அளிக்க ஆஜராகாத திமுக சட்டப்பேரவை உறுப்பினரின் மனைவி, மாமியாருக்கு பிடி ஆணை பிறப்பித்து மதுரை முதலீட்டாளா் சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் இயங்கி வந்த தனியாா் நிதி நிறுவனத்தில் ஏராளமானோா் முதலீடு செய்திருந்த நிலையில், நிதி நிறுவனம் பணத்தை திருப்பி வழங்காமல் மோசடி செய்தது. இதையடுத்து முதலீட்டாளா்கள் அளித்தப் புகாா்களின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு துணைக்கண்காணிப்பாளா் அறிவழகன் தலைமையில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
இந்த வழக்கு மதுரை முதலீட்டாளா் சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்குத் தொடா்பாக, நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்குமாறு, திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லுாா் திமுக சட்டப்பேரவை உறுப்பினா் கதிரவனின் மனைவி ஆனந்தலட்சுமி என்ற ஷா்மிலி, மாமியாா் மிருணாளனி, பாட்டி மீனாட்சி ஆகியோருக்கு நீதிமன்றம் மூலம் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து மூவருக்கும் பிடி
ஆணை பிறப்பித்து நீதிபதி ஹேமந்த்குமாா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.