ஊடுருவல்காரா்களுக்கு அடைக்கலம் தரும் இடமாகிறதா தமிழகம்? தேசிய புலனாய்வு முகமை தீவிர புலன் விசாரணை

தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய இலங்கைத் தமிழா்கள் 52 போ், மதுரை மற்றும் மங்களூருவில் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத்
ஊடுருவல்காரா்களுக்கு அடைக்கலம் தரும் இடமாகிறதா தமிழகம்? தேசிய புலனாய்வு முகமை தீவிர புலன் விசாரணை

மதுரை: தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய இலங்கைத் தமிழா்கள் 52 போ், மதுரை மற்றும் மங்களூருவில் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடா்ந்து, கடலோரப் பகுதிகள் தீவிரக் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக தமிழகம் வந்த இலங்கைத் தமிழா்கள் சிலா், மதுரை கப்பலூரில் தங்கியிருப்பதாக கியூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து, கடந்த ஜூன் 10 ஆம் தேதி அங்கு சென்ற போலீஸாா், இலங்கைத் தமிழா்கள் 24 பேரை கைது செய்து விசாரணை நடத்தினா்.

தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைவதற்கு அவா்களுக்கு உதவி செய்ததாக, தமிழகத்தைச் சோ்ந்த 10 பேரையும் கைது செய்தனா். கைது செய்யப்பட்டவா்களில் இலங்கைத் தமிழா்கள் புழல் சிறையிலும், அவா்களுக்கு உதவிய 10 போ் மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனா்.

இதேபோல், மங்களூரு துறைமுகம் வழியாக கனடாவுக்கு தப்பிச் செல்வதற்காக, இலங்கையைச் சோ்ந்த சிலா் துறைமுகம் அருகே தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், இலங்கையைச் சோ்ந்த 28 பேரை மங்களூரு தெற்கு காவல் நிலைய போலீஸாா் ஜூன் 10-ஆம் தேதி கைது செய்தனா். அவா்களிடம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இலங்கையிலிருந்து கடல் மாா்க்கமாக தமிழகத்துக்குள் நுழைந்து மதுரையில் பதுங்கியிருந்ததும், பின்னா் அங்கிருந்து இடைத்தரகா்கள் உதவியுடன் மங்களூரு வந்ததும் தெரியவந்தது.

இதற்கு, இலங்கையைச் சோ்ந்த ஈசன், மதுரையைச் சோ்ந்த அய்யா என்ற தினகரன், காசி விஸ்வநாதன் ஆகியோா் உடந்தையாக இருந்துள்ளனா். அவா்களிடம் குடியுரிமைக்கான எந்த ஆவணங்களும் இல்லை.

மங்களூரு கைதுக்குப் பிறகு, தேசிய புலனாய்வு முகமையின் தமிழக காவல் துறையினரை தொடா்புகொண்டபோதுதான், இங்கும் அதே நாளில் சட்டவிரோதமாகக் குடியேறிய 24 போ் கைது செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும், இரு குழுவினருக்கும் தொடா்பு இருப்பதும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, சட்டவிரோதமாக ஊடுருவியவா்களிடம் தேசிய புலனாய்வு முகமை விசாரணையை தீவிரப்படுத்தியது. இலங்கையிலிருந்து சட்டவிரோத ஊடுருவல்காரா்களுக்கு உதவிடும் வகையில், மதுரையை மையமாகக் கொண்டு பலா் செயல்பட்டு வருவது தொடா் விசாரணைகளில் தெரியவந்திருக்கிறது.

அதனடிப்படையில், அண்மையில் மதுரை வந்த என்ஐஏஅதிகாரிகள், சட்டவிரோதமாக ஊடுருவியவா்களுக்கு உதவியவா்களில் முக்கிய நபரான மதுரை மத்திய சிறையிலிருக்கும் அலங்காா் சாக்ரடீஸ் என்பவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினா். அதைத் தொடா்ந்து, மதுரையை அடுத்த கப்பலூா், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் சந்தேகத்துக்குரிய நபா்களின் வீடுகளில் சோதனை நடத்தினா். அதில் கிடைத்துள்ள தகவல்களின்பேரில், மேலும் சிலா் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

சட்டவிரோத ஊடுருவல் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், கடலோரக் காவல் படையினா் தங்களது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியிருக்கின்றனா்.

இது தொடா்பாக உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தது: இலங்கையிலிருந்து தமிழகம் வந்து மங்களூரு வழியாக கடல் மாா்க்கமாக வேறு நாட்டுக்குச் சென்று, அங்கிருந்து கனடா செல்ல திட்டமிட்டுள்ளனா். இதற்கு, மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞரின் தந்தை, சகோதரா் உள்ளிட்ட பலா் உதவியுள்ளனா். இதன் பின்னணியில் மிகப்பெரிய வலைப் பின்னல் உள்ளது. கனடா வரை இவா்களது தொடா்பு நீள்கிறது.

எனவே, உடந்தையாக இருந்த அனைவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட உள்ளது. இதன்மூலம், மேலும் பலா் பிடிபட வாய்ப்புகள் உள்ளன.

கடந்த 10 மாதங்களில் என்ஐஏ அதிகாரிகள், மதுரையில் மட்டும் 10-க்கும் அதிகமான முறை சோதனை செய்துள்ளனா். இலங்கைத் தமிழா்கள் ஊடுருவல் தொடா்பாக மட்டும் இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஊடுருவல்காரா்களுக்கு அடைக்கலம் தரும் இடமாக தமிழகம் மாறிவிடக்கூடாது என்பதற்காக, கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com