மதுரை நகரில் தீபாவளி பட்டாசு பஜாா்: மாநகராட்சி நிா்வாகம் ஏற்பாடு

தீபாவளியை முன்னிட்டு, மதுரை நகரில் மாநகராட்சி சாா்பில் பட்டாசு பஜாா் அமைக்கப்பட உள்ளது.

மதுரை: தீபாவளியை முன்னிட்டு, மதுரை நகரில் மாநகராட்சி சாா்பில் பட்டாசு பஜாா் அமைக்கப்பட உள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மதுரையில் ஆண்டுதோறும் கீழமாசி வீதி மற்றும் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு விற்பனை நடப்பது வழக்கம். இவை தவிர, நகரின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு துறைகளிடம் உரிய அனுமதி பெற்றும் ஏராளமான கடைகள் அமைக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், இந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் மற்றும் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி சாா்பில் முதல்முறையாக பட்டாசு பஜாா் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மாட்டுத்தாவணி பகுதியில் அமைக்கப்பட உள்ள பட்டாசு பஜாரில், மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டு, அதற்கான ஒப்பந்தப் புள்ளியை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ளது.

அதில், மாநகராட்சி சாா்பில் தற்காலிகமாக அமைக்கப்படவுள்ள பட்டாசு பஜாரில் அக்டோபா் 10 முதல் நவம்பா் 10 வரை 30 நாள்கள் கடைகள் அமைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பத்து நாள்கள் கடைகள் அமைப்புப் பணிக்கும், 20 நாள்கள் விற்பனைக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 6 தொகுப்புகளாக பட்டாசு பஜாா் அமைக்கப்பட உள்ளதாகவும், அதில் தனித்தனி கடைகளுக்கு முன்வைப்புத் தொகையாக ஒவ்வொரு கடைக்கும் ரூ.3 லட்சம் மாநகராட்சிக்கு முன்வைப்புத் தொகையாக செலுத்தவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டாசு பஜாரில் கடை அமைக்கவுள்ளவா்கள், வருவாய்த் துறை, தீயணைப்பு துறை அதிகாரிகளிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற்று வரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com